மதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகின்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாடிவாசல், பார்வையாளர்கள் மேடை, பரிசுபொருள் மாடம், விஐபி கேலரி மற்றும் இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள், காளைகளுக்கு வைக்கோல் உணவு, தண்ணீர் தொட்டிகள் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 1000 காளைகளும், 300 வீரர்களும் களம் காண உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், ஆவணங்கள் சரிபார்க்கபட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறக்கப்படவுள்ளனர்.
தொடர்ந்து வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன. அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் தலா ஒரு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.