மதுரை பாலமேடு மற்றும் திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட மாடுபிடி வீரரான அரவிந்தராஜ், ஜல்லிக்கட்டு காளை தாக்கியதில் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் திருச்சி மாவட்டம் பெரியசூரியூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, பார்வையாளரான அரவிந்த் தலையில் பலமாக அடிபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இருவரது உயிரிழப்புக்கும் இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவரது குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாலமேட்டில் இன்று நடைபெற்ற தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு அதிக காளைகளை பிடித்த ஜல்லிக்கட்டு வீரர் அரவிந்தராஜ் மற்றும் திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டை காணவந்த அரவிந்த் ஆகியோர் எதிர்பாராதவிதமாக படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அரவிந்த்ராஜ் மற்றும் அரவிந்த் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் வி.கே.சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் அரவிந்தராஜ், ஒன்பது காளைகளை அடக்கி சாதனை புரிந்த நிலையில், அதன் பின்னர் காளையை அடக்கியபோது படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை காணவந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் எதிர்பாராதவிதமாக மாடு முட்டி, படுகாயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்தும் மிகவும் வருத்தமுற்றேன். உயிரிழந்த அரவிந்தராஜ் மற்றும் அரவிந்த் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.









