உலகக்கோப்பை தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையான பயிற்சி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நேரடியாக சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இறங்குகிறது. முதலாவதாக ஆஸ்திரேலியா அணியுடன் இன்று மோதுகிறது.
முதல் பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் இந்த பயிற்சி ஆட்டத்தில் உள்ளனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் பயிற்சி ஆட்டத்தில் களம் காணுகிறார்.
இதே போல் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அதனால் இது பயிற்சி மோதல் என்றாலும் கூட விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறது.
-இரா.நம்பிராஜன்








