முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

பொன்விழாவை நிறைவு செய்து 51-வது ஆண்டில் அதிமுக – கடந்து வந்த பாதை


விக்னேஷ்

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக அரைநூற்றாண்டை கடந்து 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் அதிமுக கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணாவின் மறைவுக்கு பிறகு அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் திமுகவில் குழப்பம் நிலவியது. பல மூத்த நிர்வாகிகள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக இருந்த நிலையில் திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், மூத்த நிர்வாகிகளை சமாதானப்படுத்தி கருணாநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர், அண்ணா வகுத்த சட்டதிட்டங்களை மாற்றி திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றது இருவருக்குமிடையே கருத்துவேறுபாடை ஏற்படுத்தியது. 1972ம் ஆண்டில் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும், அமைச்சர்கள் மீது வெளிப்படையாக விமர்சனங்களை வைத்ததன் விளைவாக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். தமக்கு ஆதரவான நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வாரத்தில் தொடங்கப்பட்டது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கட்சி தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. 1977ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதன்முறையாக அதிமுக ஆட்சியமைக்க, முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பதவியேற்றார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா – ஜானகி இடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக உடைந்ததோடு இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஒன்றிணைந்து சந்தித்த 1991ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.


1996 ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்த அதிமுக, 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பிறகு 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு, கட்சி பொறுப்பில் வி.கே.சசிகலா, பதவியை ராஜினாமா செய்து ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தம், சசிகலாவுக்கு சிறை, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு, டிடிவி தினகரன் நீக்கம், மீண்டும் அணிகள் இணைப்பு என அடுத்தடுத்த திருப்பங்கள் அதிமுகவில் நடந்து கொண்டே இருந்தன.

எடப்பாடி பழனிசாமி நான்கு மாதங்கள் கூட முதலமைச்சராக தாக்குபிடிக்க முடியாது என பேசப்பட்ட நிலையில், நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்ததுடன் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு, குடிமாராமத்து என பல திட்டங்களையும் செயல்படுத்தினார். இருப்பினும் அடுத்து வந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. கட்சி தலைமைக்குள் இருந்த முரண்பாடுகள், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பமே தோல்விக்கான காரணமாக பேசப்பட்டது.

 

திமுக ஆட்சியமைத்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டனர். பொன்விழா ஆண்டை கொண்டாடி முடித்த ஓராண்டுக்குள் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்க தொடங்கியது. இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் இணைந்து அழைப்பு விடுத்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் வழக்கு, ஜூன் 23 ல் நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பு, மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, அதிமுக அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல், எம்.ஜி.ஆர் மாளிகைக்கு சீல் வைப்பு என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருந்தன.

இருவருக்குமான பிரச்னை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தொடங்கி சட்டமன்றம் வரை நீண்டு கொண்டே செல்கிறது. அரைநூற்றாண்டை கடந்து 51 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டுவருகிறது. அதிமுகவின் அச்சாணி தொண்டர்களே என்றால் அவர்களின் எண்ணத்திற்கேற்ப தலைவர்கள் செயல்பட்டால் மட்டுமே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுகவை கொண்டு வர முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!

Gayathri Venkatesan

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்!

Jeba Arul Robinson

கல்வி கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

G SaravanaKumar