சுகாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சி திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ,”பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் தற்போதைய போராளிகளுக்கு ஆதரவாக ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி 2 முதல் 3 மாதங்களில் முடிவடைந்தது விடும். பயிற்சி முடிவடைந்த பின்னர் இவர்களும் உடனே களத்தில் இறங்க தயாராகிவிடுவார்கள். இந்த பயிற்சியானது கொரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதார பாதுகாப்பு பணியாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமின்றி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கும்.
இந்த பயிற்சியின்படி முன்களப் பணியாளர்கள், தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் இலவசப் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின்போது இலவச உணவு, தங்கும் இடம் வழங்கப்படும். உதவி தொகையும் வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும்,” என்று கூறினார்.







