முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு!

நடிகை அளித்த பாலியல் புகாரில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடோடிகள் படத்தில் நடித்திருந்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தம்மை திருமணம் செய்துகொள்வதாகக்…

நடிகை அளித்த பாலியல் புகாரில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடோடிகள் படத்தில் நடித்திருந்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தம்மை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தார். அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால், தாம் மூன்று முறை கருவுற்றதாகவும் மணிகண்டன் தம்மை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக காவல்துறையினர் தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து மணிகண்டன் தலைமறைவான நிலையில், அவரை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவரை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை காவல்துறையினர் மதுரை விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.