சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து அந்த மாநில முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.  உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய…

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து அந்த மாநில முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா,  தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.  அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது.  அதில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனர்.

சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.  41 தொழிலாளர்களை மீட்க மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு 9-வது நாளாக ஈடுபட்டு வருகிறது.  அவர்களுக்கு குழாய் வழியாக உணவு,  குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.  சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை மீட்பு பணிகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, சுரங்கப்பாதையினுள் சிக்கி 9 நாட்களாக தவித்து வரும் 41 தொழிலாளர்களை மீட்பது குறித்தும்,  செங்குத்தாக துளையிடும் மீட்பு பணிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்தார்.

தற்போது அத்தியாவசியப் பொருட்களை உள்ளே அனுப்புவதற்காக செங்குத்தாக துளையிடும் பணிகளை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.