ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக குறி தமிழக இளைஞர்களிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் பணத்தை வாங்கிட்டு ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி நபர்கள் குறித்த தகவல் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் டெல்லி ரயில் நிலையத்தில் கையில் ஒரு நோட்டுகளை வைத்துக்கொண்டு போகும் வரும் ரயில்களை கணக்கெடுத்துக் கொண்டும், எத்தனை பெட்டிகள் உள்ளன என்று இளைஞர்கள் சிலர் குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தனர். இதைக் கவனித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது தங்களுக்கு ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர், கிளார்க் உள்ளிட்ட வேலைகள் கிடைத்து இருப்பதாகவும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இது குறித்து ரயில்வே உயர்அதிகாரிகளிடம் விசாரித்து உள்ளனர். அதற்கு தாங்கள் யாரையும் பயிற்சியில் நியமிக்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை போலீசார் காவல்நிலையம் அலைத்து வந்து விசாரித்த போது தான் மிகப்பெரிய வேலை வாய்ப்பு மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இத்தனைக்கும் இந்த மோசடியில் சிக்கிய இளைஞர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பதுதான் கூடுதல் வேதனைக்குரிய விஷயமாகும்.
விருதுநகரை சேர்ந்த 78 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்புசாமி. இவர் தனது பகுதியில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்க பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சுப்புசாமிக்கு கோவையை சேர்ந்த சிவராமன் என்பவருடைய அறிமுகம் கிடைத்து உள்ளது.
அப்போது தான் டெல்லி எம்.பி குடியிருப்பில் வசித்து வருவதாகவும் தனக்கு அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் ரயில்வே துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலருடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார் சிவராமன். தங்களுக்கு தெரிந்த ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் ரயில்வேதுறையில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சுப்புசாமி தனக்கு தெரிந்த இளைஞர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வேலை தேடும் இளைஞர்கள் சுப்புசாமியை நாடியுள்ளனர். தொடர்ந்து சுப்புசாமி தனக்கு அறிமுகமான சிவராமனிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி உள்ளார். சிவராமனை நாடிய இளைஞர்களிடம் தனக்கு தெரிந்த விகாஸ் ராணா என்பவர் வடக்கு ரயில்வேயில் உயர் அதிகாரியாக இருக்கிறார்.
அவரிடம் பணத்தை கொடுத்தால் உங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் வேலை வாங்கி கொடுப்பார் என கூறி டெல்லிக் அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பி இளைஞர்கள் 2 லட்சம் முதல் 24 லட்சம் ரூபாய் வரை விகாஸ் ராணாவிடம் கொடுத்துள்ளனர். மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு விகாஸ் ராணா வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் டெல்லி சங்கர் மார்க்கெட்டில் வடக்கு ரயில்வேயின் இளநிலை இன்ஜினியர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்துள்ளது. தொடர்ந்து டெல்லி ரயில்வே மருத்துவமனைக்கு மருத்துவ சான்றிதழுக்காக பல்வேறு தேதிகளில் இளைஞர்களை அழைத்து சென்றுள்ளார். இளைஞர்கள் அனைவருக்கும் ஒருமாதம் பயிற்சி என்று அடையாள அட்டை, பணி நியமண ஆணை, உள்ளிட்டவைகளை போலியாக வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பயிற்சி என்ற பெயரில் டெல்லி ரயில் நிலையத்தில் வந்து செல்லும் ரயில்களையும் ரயில் பெட்டிகளையும் என்ன சொல்லி ஏமாற்றி உள்ளனர். இவை அனைத்தும் முறைப்படி நடந்துள்ளது என்பதும் இதற்கு விகாஸ் ரானாவின் நண்பர் துபே உதவியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதை கேட்டு பதறிப்போன சுப்புசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். விசாரணைக்கு பிறகே இதுபோல எத்தனை தமிழக இளைஞர்கள் ஏமாந்தனர் என்ற விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு மோசடியாளர்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகத்தின் ஊடக தொடர்பு கூடுதல் இயக்குனர் யோகேஷ் பாவ்ஜே தெரிவித்துள்ளார். ரயில்வே வேலை வாய்ப்புகள் மோசடி தொடர்பாக அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வேயில் வேலை எனக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அப்பாவி தமிழக இளைஞர்களை ரயில் பெட்டிகளை எண்ண வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.