“மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும்” – தவெக தலைவர் விஜய் வாக்குறுதி!

தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடைபெறும் விழாவுக்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் சாதனை பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “சிங்க பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து தவெக சார்பில் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

பெண்கள், குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனி இலாகா உருவாக்கப்படும். அது எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

60 வயது இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2500 கொடுக்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் இருக்கும் பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்படும்.

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.

பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலை அண்ணன் சீராக வழங்கப்படும்.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றல் இல்லாமல் செய்வதற்காக தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.

வெற்றி பயணம் திட்டமாக அனைத்து அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.