முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா ? – திமுகவுக்கு ஓபிஎஸ் கேள்வி

திமுகவில் தேர்தலில் வென்று அரசு பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் கணவர்கள் அவர்களின் உரிமையில் தலையிடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பிரச்சனை புதிதல்ல, இது அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்தன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனை என்பது பெண்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!” என்று பெண்ணின் உயர்வைப் போற்றிப் பாடினார் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கினார் மகாகவி பாரதியார் அவர்கள். “நாட்டுக்கு ஏற்றம் தருவது பெண்களின் முன்னேற்றமே” என்றார் போறிஞர் அண்ணா அவர்கள். இவற்றிற்கெல்லாம் முற்றிலும் முரணாக தமிழ்நாட்டில் பெண்ணடிமைத்தனம் தலைவிரித்து ஆடுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 34-வது வார்டு பெண் கவுன்சிலர் ஷர்மிளா காந்தியின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கவுன்சிலர் அலுவவகத்திற்கு வந்து மக்களை மிரட்டுவது போன்ற வீடியோவும், தாம்பரம் மாநகராட்சி 31-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்  எம். சித்ரா தேவி என்பவரின் மைத்துனர் தனது ஆதரவாளர்களுடன் சென்று உணவுக் கடை உரிமையாளரை மிரட்டியது போன்ற புகாரும் வெளிவந்த நிலையில் இதனைக் கண்டித்து நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன். இருப்பினும் தி.மு.க. பெண் கவுன்சிலர்கள், பெண் நகரமன்றத் தலைவர்கள், பெண் மாநகராட்சி மேயர்களுக்கான பணிகளை அவர்களது கணவர்கள் தான் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில், மேயர் வி. இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதாகவும், மதுரை மாநகராட்சி மன்றத்தில் முன் வரிசையில் இடமளிக்காததைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு, பின் வெளிநடப்பு செய்ததாகவும், நேற்று முன் தினம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்திலும் முன்வரிசையில் இடமளிக்காததால் இரு தரப்பிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும், இதனைத் தொடர்ந்து மேயரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கவுன்சிலர்கள் புகார் அளிக்க சென்றதாகவும், அவர்களுடன் செய்தியாளர்களும் சென்றதாகவும், அப்போது மேயரின் கணவர் மற்றும் அவரது ஆட்கள் செய்தியாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் கதவை பூட்டியதாகவும், தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்குப் பதிலாக அவர்களது கணவன்மார்களும், உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல். ஒருபுறம் பெண்ணுரிமையைப் பற்றி பேசிக் கொண்டு, மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது என்பது “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. ஒருவேளை இதுதான் “திராவிட மாடல்” போலும்! என கடுமையாக கேள்விக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிக்கையாளரும், பெண்ணுரிமை போராளியுமான கவிதா முரளிதரன்,  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், பெண்களின் உரிமைக்காக அறிக்கை வெளியிட்டிருப்பது நல்ல கருத்தாகதான் பார்க்கிறேன். அதேநேரத்தில் இது புதிதல்ல. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடனே, பெண்களின் அதிகாரம் பெண்களின் கைகளிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதில் உறவினர்கள் யாரும் தலையிடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். பெண்களின் அதிகாரங்களில் ஆண்களை தலையிடுவதை தவிர்க்கும் விதமாக சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அவர்கள் உறவினர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது இது ஒரு நல்லதோர் எடுத்துக்காட்டு என்றார்.

மேலும், அதிகாரத்திலுள்ள நூறு பெண்களில் பத்து பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டாலே மிகப்பெரிய வெற்றியாக பார்க்க வேண்டியுள்ளது என்கிறார் கவிதா முரளிதரன்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்பதுபோல் எதிர் வரும் காலங்களில் அதிகாரத்தில் உள்ள பெண்களின் அதிகாரம் அவர்களின் கையிலேயே இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

Advertisement:
SHARE

Related posts

’தொரட்டி’ படத்தின் கதாநாயகர் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழப்பு!

Vandhana

5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக எதுவும் செய்யவில்லை: முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

27% ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை

Saravana Kumar