ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!

ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்…

ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று தனி வாகனத்தில் ஆரணி நகருக்கு விரைந்து வந்து சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டனர்.
இதில் தாங்கள் தங்கள் பகுதியில் அளித்த தேர்தல் வாக்குறுதி படி எங்களுக்கு புதிய பகுதிநேர ரேஷன் கடையை அமைத்து தரப்பட வேண்டும் எனவும், திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு பகுதியில் பேருந்து நிழற்கூடம் அமைத்துக் கொடுத்து பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அவர்களுக்கு உறுதுணையாக பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வேலாயுதம், பாட்டாளி மக்கள் கட்சி அந்தப் பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் கீதா சரவணன் உள்ளிட்டோரும் பொதுமக்களுடன் கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.