2024 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, யாருடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என பாரத ராஷ்டிர சமிதி தலைவரான கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, என்.டி.ஏ மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா ஒவ்வொரு சிறிய கட்சியையும் தங்களுடன் இணைக்க முயல்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் இன்னும் அங்கு முக்கிய போட்டியாக உள்ளது. 2018 தேர்தலில், அப்போதைய டிஆர்எஸ் 88 இடங்களையும், காங்கிரஸ் 19 இடங்களையும் பெற்றிருந்தாலும், அது இரண்டாவது இடத்திலிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவிற்குத் தனது ஒரு நாள் பயணத்திற்குப் பிறகு பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “யாருடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை. கூட்டணி வைக்கவும் விரும்பவில்லை. அதேசமயம் நாங்கள் தனியாகவும் இல்லை. எங்களுக்கும் நண்பர்கள் உள்ளனர். புதிய இந்தியா என்றால் என்ன? தொடர்ந்து 50 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியிலிருந்த போது எந்த மாற்றமும் இல்லை” என பதிலளித்துள்ளார்.







