மதுரையில் கள்ள நோட்டுகளை மாற்றும் பெண்கள்; கண்காணிப்பு தீவிரம்!

மதுரை மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்று பிடிபட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் இயங்கி வரும் வாரச்சந்தையில் கடந்த வாரம் கள்ள நோட்டுகளை…

மதுரை மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்று பிடிபட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இயங்கி வரும் வாரச்சந்தையில் கடந்த வாரம் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இரு பெண்களைப் பிடித்து வியாபாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரையும் பாலமோடு போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரைச் சேர்ந்த சந்திரா(வயது 42) என்பதும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வலசையைச் சேர்ந்த பத்மாவதி(வயது 43) என்பதும், அவர்கள் சந்தையில் ரூ.500 கள்ளநோட்டுகளை மாற்றுவதற்காக வந்ததும் தெரிய வந்ததுள்ளது. மேலும், இருவரையும் சோதனையிட்டதில் அவர்களிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் 16 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்குக் கள்ள நோட்டுகளைக் கொடுத்த சிவகாசியைச் சேர்ந்த ராஜா என்பவரைத் தேடி வருகின்றனர். விசாரணையில், கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பெண்களைப் பயன்படுத்தித் தொடர்ந்து கள்ள நோட்டுகளை மாற்றுவதும் தெரியவந்துள்ளது. மேலும், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக, பெட்ரோல் பங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்ந்தெடுத்து கள்ள நோட்டுகளை மாற்றுவர், இதுபோன்ற இடங்களில் ரூபாய் நோட்டுகளை மிகவும் கவனமாகப் பார்க்க நேரம் இருக்காது என்பதால்.

தற்போது, கள்ள நோட்டுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகம் உள்ளதால் பெட்ரோல் பங்குகளில் கள்ள நோட்டுகளை எளிதில் கண்டறிந்து விடுகின்றனர். எனவே, கள்ள நோட்டுகளை மாற்றுவதற்கு புதிய தந்திரங்களை இதுபோன்ற சம்பவங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அதன் அடுத்தகட்டமாகக் கள்ள நோட்டுகள் மாற்றுவதற்குப் பெண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பெட்ரோல் பங்குகள், டாஸ்மாக் கடைகளில் மாற்றுவதை விடுத்து கிராமப்புறங்களில் உள்ள சந்தைகளைக் குறிவைத்து இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘பெண் காவலரின் மகள் எடுத்த விபரீத முடிவு!’

மேலும், சந்தைகளில் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காகப் பெண்களையும் தயார்ப்படுத்தியுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக வறுமையில் வாடும் பெண்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட பெண்களை அணுகி 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்றித் தந்தால் அவர்களுக்கு ரூ.200 கமிசன் தொகையாகத் தந்துவிடுவதாகக் கூறி அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பிவிடுவதாகத் தெரியவந்துள்ளது.

வாரச்சந்தைகளில் பெரும்பாலான வியாபாரிகள் பெண்களாக இருப்பதால் அவர்களால் கள்ள நோட்டுகளை எளிதில் கண்டறிய முடியாது எனக் கருதி இது போன்ற செயலில் அவர்கள் ஈடுபடுவதாகவும், கடையில் இருக்கும் பெண்களிடம் இருந்து எளிதாகத் தப்பித்து விடலாம் என்பதால் இந்த திட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பெண்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதில் ஈடுபட்டு வருவதாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால் மாவட்ட முழுவதும் வாரச்சந்தைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.