சேலத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான பாலசுப்பிரமணியம், தங்கத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 108 பெண்கள் இணைந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, முதலீடு செய்ததற்காக காசோலை மற்றும் பத்திரத்தை அனைவருக்கும் அவர் வழங்கி உள்ளார். அவை காலாவதி ஆகி விட்டதாக கூறி திரும்பப் பெற்றுக்கொண்ட பாலசுப்பிரமணியன், முதலீடு செய்த பணத்தை திருப்பி தராததாக புகார் எழுந்துள்ளது.
இதனால் ஏராளமான பெண்கள் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியனின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.








