“பெண்களுக்கு உங்கள் சொந்த கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை” – தவெகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

முதல்வர் விஜய் தனது கட்சிக்குள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி என்பவர் தவெக பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் மேலும் கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள செய்தியானது அதிர்ச்சி அளிக்கிறது.

சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை இது போன்ற வக்கிர புத்தியுடன் அணுகும் நபர்களைக் கொண்ட தவெக தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகிறது?

பிரச்சார மேடைகளில் ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே என்று முதல்வர் விஜய் அவர்கள் பேசியதன் அர்த்தம் இப்போதுதான் தமிழக மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

கடந்த கால திமுக அரசு பெண்கள் பாதுகாப்பிலும் சட்டம் ஒழுங்கிலும் எப்படி திராணியற்ற அரசாக விளங்கியதோ அதையேதான் தற்போதைய தவெக அரசும் ஒரு படி மேலே செய்து வருகிறது.

தன்னை அண்ணா என அழைக்கும் உங்களின் சகோதரிகளாகிய தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உங்கள் சொந்த கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்ற மோசமான நிலையில் தான் பெண்களின் பாதுகாப்பு இருக்கிறது.

முதல்வர் விஜய் தனது கட்சிக்குள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.