“தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை!” – கனிமொழி கடும் விமர்சனம்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் நீதி என தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள், ஆளுங்கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:

குற்றங்களைச் சாதாரணமாகக் கருதும் அரசு!

இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய ஒரு அமைச்சர், ஏதோ வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதைப் போல, கடந்த ஆண்டு இப்படித்தான் இருந்தது, அதற்கு முந்தைய ஆண்டு இப்படித்தான் இருந்தது, இந்த ஆண்டு இப்படித்தான் இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு பிரச்சினையைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள், அதை மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகக் கருதி இயல்பாக்க முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு இதனைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லை. இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படியாவது ஒரு காரணத்தையோ அல்லது சாக்குப்போக்கையோ கூறி தங்களை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறதே தவிர, தங்களைத் திருத்திக்கொள்வதற்கான எந்த முயற்சியும் அவர்களிடம் இல்லை.

எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுங்கள், நாங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் கற்றுக்கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைத்தான். ஏனென்றால், பெரும்பாலான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி கலவரத்தின்போதும் உரிய நடவடிக்கை எடுக்காத சூழலை நாம் பார்த்திருக்கிறோம்.

பெண்களை மிரட்டி புகார்களைத் திரும்பப் பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு!

பாதிக்கப்பட்ட நபர் அவருடைய வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டு, மிரட்டப்பட்டு, ஒரு வீடியோவை வெளியிட வைத்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது அதுதொடர்பாக மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதேபோல, இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய சிலரையும், அரசு அலுவலகங்களில் நடைபெறும் செயல்பாடுகளையும், எம்எல்ஏக்களையும் விமர்சித்துப் பல பெண்கள் புகார் தெரிவிக்கும்போது, அவர்களை மிரட்டி வழக்குகளைத் திரும்பப் பெற வைக்கக்கூடிய சூழலையும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்கூட இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். அங்கு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினரை எதிர்த்துக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் கைது செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்!

இந்தச் சூழல் எங்கே போய் முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே எதுவுமே நடக்கவில்லை என்று எம்எல்ஏ ஒருவர் பேசுகிறார். அப்படியானால் திடீரென்று ஒரு மாவட்ட ஆட்சியருக்கு, காவல்துறை அதிகாரியைக்கூட மாற்றி, இத்தனை நாட்களாக இல்லாமல் புதிதாக ஒருவரை நியமித்து அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியவில்லை. இதற்கும் ஏதாவது ஒரு திரைக்கதையை எழுதி, வசனத்தைத் தயாரித்து ஏதாவது ஒரு விளக்கத்தை அளிக்கலாம். இப்படிப்பட்ட சூழலில், ஒரு அரசு அதிகாரியாக இருப்பவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய தவெக!

தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்; இங்கு குற்றங்களே நடைபெறாது; ஒரு ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டை வைத்திருப்பேன் என்று கூறினார்கள். முன்பெல்லாம் ஒரு எதிரி நாட்டின் மீது படையெடுக்கும்போது, அந்த நாட்டில் படையெடுக்கும் ராணுவத்தினர் எத்தகைய அட்டூழியங்களில் ஈடுபடுவார்கள் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோன்ற ஒரு சூழல்தான் இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து, தவெக இன்று தமிழ்நாட்டையே சூறையாடிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.

ஆறு மாதங்கள் கழிந்தது இனியாவது பொறுப்புடன் செயல்பட வேண்டும்!

சட்டம் ஒழுங்கு என்பது பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் நிலவுகிறது. எத்தனையோ கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியில் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான் உண்மை. ஆறு மாதங்களுக்கு முன்பாகவும் இதுகுறித்து ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டது. இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புடன் செயல்படுங்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.