தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, கடந்த திமுக ஆட்சியின்போது நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த அக். 26-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவருக்கு நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த நவ. 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நவ. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே, அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்பில் மகேஸின் ஜாமீன் மனு இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.




