பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைச்சரின் பெயரைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண், காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓடியுள்ளார். கரூரைச் சேர்ந்த சௌமியா (24) என்கிற…

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைச்சரின் பெயரைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண், காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓடியுள்ளார்.

கரூரைச் சேர்ந்த சௌமியா (24) என்கிற பெண், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சங்களை பெற்று ஏமாற்றியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மாலை போலீசார் சூலூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களுடன் பணம் கொடுத்து ஏமாந்த அப்பநாயக்கன்பட்டி பொதுமக்களும் சூலூர் காவல் நிலையதிற்கு சென்றனர். இரவு நேரம் என்பதால் பெண்களை தற்போது விசாரிக்க முடியாது எனக் கூறி நாளை காலை வர கூறினர் காவல் துறையினர். ஆனால் வெளியே சென்றால் பொதுமக்கள் சௌமியா மற்றும் வழக்கறிஞர்களை செல்ல விடாமல் சூழ்ந்து கொள்வார்கள் எனக் கூறி அதிகாலை 3 மணி வரை அங்கேயே அமர்ந்து இருந்தனர். பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் காவல் நிலைய வாசலில் அதிகாலை 3 மணி வரை காத்திருந்தனர்.

இதனையடுத்து, தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும், இதனையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாகவும் செளமியா கூறியிருக்கிறார். இதனையடுத்து, அரசு அவசர ஊர்தியை போலீசார் வரவழைத்தனர். அவசர ஊர்தி வந்தவுடன் அதில் ஏறி வழக்கறிஞருடன் காவல் நிலைய வளாகத்தை விட்டு செளமியா தப்பி சென்றார். அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அவசர ஊர்தியை பின்தொடர்ந்து பொதுமக்களும் சென்றனர். இதனால் அதிகாலை 3 மணி வரை சூலூர் காவல் நிலைய வளாகம் பரபரப்பாக இருந்தது.

மேலும், இவர் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்வாறு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரியவருகிறது. மேலும் இதுபோல பல இடங்களில் இவர்மேல் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபல அரசியல் வாதிகளுடன் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு பொது மக்களிடம் ஏமாற்றி பணம் பெற்றதும் தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.