கொரோனாவை கட்டுப்படுதற்கான நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய வைரஸ் அனைத்து நாடுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்தது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வந்தன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் பொருளாதார ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டன.
கொரோனா தடுப்பூசிகள் அறிமுகமான பின் தொற்றின் பரவல் சற்று குறையத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று இல்லை என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் என்றும் கொரோனாவை கட்டுப்படுதற்கான நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.







