கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஓமலூர் நீதிமன்றம் முன்பு குடும்பத்தினருடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மூங்கிலேரிபட்டி காலனியைச் சேர்ந்த மரகதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
மூங்கிலேரிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமனிடம், மரகதத்தின் கணவர் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை அடைத்த நிலையில், குடியிருந்த வீட்டை எழுதிக் கொடுக்கும் படி மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டினார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








