முதலமைச்சரிடம் இரு குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த கைம்பெண் காவல் துறையினரால் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள். இவருடைய கணவர் 2021ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வருமான ஆதாரம் இல்லாத தனக்கு கருணை அடிப்படையில் பணி வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவிற்கு இன்று வருகை தந்த முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க ரோஜா இல்லம் அருகே சோலையம்மாள் தனது இரண்டு கைக் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். முதலமைச்சரின் வாகனம் வந்தபோது அவரிடம் மனு அளிப்பதற்காக முயன்றார். அப்போது, அங்கிருந்த முதலமைச்சரின் பாதுகாவலர்களால் சோலையம்மாள், அவரது இரண்டு குழந்தைகளும் தள்ளிவிடப்பட்டதாக தெரிகிறது. இதனால் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதனை கவனித்த மற்றொரு பாதுகாவலர் அவர்களை தூக்கிவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து சோலையம்மாள் நமது செய்தியாளரிடம், “ எனது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். எனக்கு தந்தையும் இல்லை, சகோதரர்களும் இல்லை. இரண்டு குழந்தைகளுடன் வருமானமின்றி, தங்கை ஆதரவுடன் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு இளம் பட்டதாரி. எனக்கு கருணை அடிப்படையில் பணி வேண்டி முதலமைச்சரை சந்திக்க வந்தேன். இரு குழந்தைகளுடன் வந்த என்னை பாதுகாவலர்கள் பிடித்து கீழே தள்ளி விட்டனர்” என்று கண்ணீர் மல்கக் கூறினார். மரத்தடியில் தனது குழந்தைகளுடன் சோலையம்மாள் அழுதுகொண்டிருந்த காட்சி பார்ப்போரை கண்கலங்கச் செய்தது.
எளிதில் அணுகும் முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார். அதுதான் திராவிட மாடல் என்றும் எல்லா இடங்களிலும் பேசி வருகிறார்.
மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற ஒரு திட்டத்தையே வைத்துள்ளார். அத்துடன், முதலமைச்சர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி, அவர்களின் மனுக்களை பெற்றுக்கொள்கிறார். புகைப்படங்கள் கூட எடுத்துக்கொள்கிறார். ஏன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து அதுதொடர்பாக பிரச்னைகளை கூட தீர்த்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நரிக்குறவர் இன மாணவிகள் பேசியதைக் கேட்டு, அவர்களின் வீட்டிற்கே சென்று நலத்திட்டங்களை அளித்து வந்தார்.
முதலமைச்சர் இவ்வாறான எளிமையாக அணுகும் நிலையில் இருக்க, அவரை சந்தித்து மனு அளிக்க வந்த பெண்ணை பாதுகாவலர்கள் கீழே தள்ளிவிட்ட சம்பவம் வேதனையளிப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அவர்களை முதலமைச்சர் பார்த்திருந்தால் நிச்சயம் சந்தித்துப் பேசி மனுவை பெற்றிருப்பார், அவர்களின் வேதனையும் தீர்ந்திருக்கும் எனவும் கூறுகிறார்கள்.







