சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலருக்கான சிறப்புப் பயிற்சி கல்லூரி அமைப்பது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் வேங்கைப்பட்டியில் 3 கோடியே 17 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் சிவகங்கை மாவட்டத்திற்காக 280.90 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள், முடிவுற்ற திட்டங்கள் மற்றும் 59 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை வழங்கினார்.
விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை சீரமைக்க 22 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதனால் மூலம் மேலப்பூங்குடி, நாலூக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் பயனடையும் வகையில் 12 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்படும் எனத் தெரிவித்த முதலமைச்சர், “வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை குறித்து நாளையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன்” என உறுதியளித்தார்.
கலைஞரின் ஆட்சி போல் தன்னுடைய ஆட்சி இருப்பதாக குடியரசு துணை தலைவர் அண்மையில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது தெரிவித்தது மிகவும் பெருமையாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், கீழடி மற்றும் அதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டை மீட்டது திமுக அரசு தான் என சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்களுக்கான திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பயனாளிக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்வது உறுதிபடுத்தப்படும் என்பதும் தான் திராவிட மாடல் அரசு என குறிப்பிட்ட ஸ்டாலின் தனக்குப் பின் ஸ்டாலின் என கலைஞர் கூறியதை தொடர்ந்து மக்கள் பணியாற்றி நிறைவேற்றி வருவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.







