மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர், அந்த 19 வயது பெண். திங்கட்கிழமை, அங்குள்ள கலம்னா காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், புகார் ஒன்றைக் கொடுத்தார். படித்துப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. அதில், தன்னை மறைவான இடத்துக்குக் கடத்திச் சென்று 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார்.
அதாவது, காலையில் இசை பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தேன். சிக்காலி பகுதியில் சென்றபோது, வெள்ளை நிற வேன் ஒன்று அருகில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவர்கள் முகவரி கேட்டனர். சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் என்னை வேனுக்குள் இழுத்துத் தள்ளினர். பின்னர் என் கண்ணைக்கட்டி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டு பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கூறியிருந்தார்.
இதனால் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், 40 தனிப்படை அமைத்து,அவர் சொன்ன பகுதி முழுவதும் சல்லடையாக விசாரிக்கத் தொடங்கினர். அங்குள்ள சுமார் 250 சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தனர். ஒரு நாள் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டும் அவர் சொன்ன இடத்தில், சொன்ன நேரத்தில், எந்த வேனும் வரவில்லை என்பதும் அவரை யாரும் கடத்தவில்லை என்பதும் தெரிய வந்தது. அந்த இளம்பெண் அங்கும் இங்கும் சுற்றிவிட்டு பிறகு ஒரு ஆட்டோவில் இறங்கி போலீஸ் ஸ்டேஷன் வருவதும் சிசிடிவி கேமரா மூலம் தெரிந்தது.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரிக்கத் தொடங்கியதும் அவர் முன்னுக்கு பின் முரணாக உளறத் தொடங்கினார். பிறகுதான் தெரிந்தது, அவர் சொன்னது அனைத்தும் பொய் என்று. தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக இப்படி பொய் சொன்னதாக போலீசிடம் கூறியிருக்கிறார். அவருடைய திட்டம் என்ன என்பது பற்றி அவர் சொல்லவில்லை. இந்த பொய் புகார் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.








