“குதர்க்க பேச்சு மூலம் மலிவான விளம்பரம் தேட வேண்டாம்”-பாஜகவுக்கு அழகிரி எச்சரிக்கை

“குதர்க்க பேச்சுகளின் மூலம் மலிவான விளம்பரத்தை தேட வேண்டாம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்…

“குதர்க்க பேச்சுகளின் மூலம் மலிவான விளம்பரத்தை தேட வேண்டாம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை,“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கிடையாது; அதனால்தான் திமுகவுடன் காங்கிரஸ் கட்சியை இணைத்துவிடலாம்” என விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து அண்ணாமலையின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த கே.எஸ்.அழகிரி, “கடந்த 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாஜக, 2021 சட்டமன்ற தேர்தலில் 23 இல் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள், இந்நாள் தலைவர்கள் தோல்வியடைந்ததை மறந்து பேசலாமா?

ஆனால் மக்களவையில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலிலும், சட்டமன்றத்தில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும் வெற்றிபெற்று தமிழ்நாடு காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரசே இல்லை என்று கூறுகிற அண்ணாமலை இத்தகைய குதர்க்க பேச்சுகளின் மூலம் மலிவான விளம்பரத்தை தேட முயல்கிறார். வேண்டாம் விபரீதம்.” என டிவிட்டரில் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.