உரத் தட்டுப்பாட்டை போக்க தொடர்பு எண்கள் வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரம் மற்றும் யூரியா விலை திடீரென அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் மாநில அளவில் உர உதவி மையம் தொடர்பு எண்கள் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 இலட்சம் எக்டர் பரப்பிலும், சிறுதானியம், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி பயிர்கள் சேர்த்து 46.2 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
தேவையான உரங்கள், மாநிலத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4,354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் உர உதவி மையம், சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பெருங்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 91 93634 40360 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தெரிவித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.







