திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 150 பெண் தொழிலாளர்கள், அவிநாசி அருகே உள்ள கைக்காட்டிபுதூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும், அங்குள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நிர்மலா என்ற பெண் தொழிலாளி, திடீரென விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், தொழிற்சாலை நிர்வாகமே, பெண்ணின் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த 22-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக, நிர்மலா விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது. மறுநாள் பணிக்குச் சென்ற அவரை, உள்ளே அனுமதிக்காமல் தொழிற்சாலை நிர்வாகம் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுதி அறைக்குச் சென்ற அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








