நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் ராயப்பேட்டையில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டினால் தென்மாவட்டங்களில் அதிமுக 50க்கும் மேற்பட்ட இடங்களில் தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான அன்வர்ராஜா குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆவேசமடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வன்னியர்களின் வாக்கு அதிமுகவுக்கு தேவையில்லையா? அவர்கள் வாக்களிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. மேலும், அன்வர்ராஜா கட்சி தலைமைக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் கட்சியை குற்றம் சாட்டி பேசுவதாகவும் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த அன்வர் ராஜா, கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி தான் நடந்து கொண்டதாக கருதினால் அதற்கு மன்னிப்பு கோருவதாகக் கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் 30-க்கும் அதிகமான அமைப்புச் செயலாளர்கள் இருப்பதாகவும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தாம் இணையும் போது சரிசமமாக மரியாதை அளிக்க வேண்டும் என்று தான் பேசப்பட்டது எனவும், ஆனால் அது முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் ஆதங்கத்துடன் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.