தோனிக்கும் CSK-கும் உள்ள பந்தம்!

15வது ஐபிஎல் தொடர் வரும் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி. தோனிக்கும் சென்னை அணிக்குமான பந்தம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.…

15வது ஐபிஎல் தொடர் வரும் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி. தோனிக்கும் சென்னை அணிக்குமான பந்தம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்த மகேந்திரசிங் தோனி, சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் 15வது ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி செய்த சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை வலம் வந்தது என்றால், அதற்குச் சென்னை ரசிகர்களால் தல என அழைக்கப்படும் தோனியின் பங்கு அளப்பரியது.

சென்னை அணி வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் தோனியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். எண்ணற்ற இளம் வீரர்களை உருவாக்கியது, அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்களைக் கச்சிதமாகப் பயன்படுத்தியது என ஒரு தலைவனுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார் தல தோனி. வீர்ர்களின் மீது தொடர் நம்பிக்கை வைத்து அவர்களின் முழு திறனை வெளிக்கொண்டு வருவதில் தோனிக்கு நிகர் தோனியே. அவ்வாறு தோனியின் கூடாரத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா தற்போது சென்னை அணியின் கேப்டனாகி உள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாகவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜடேஜாவிற்கு இந்த கேப்டன் பொறுப்பு மிகவும் பொருத்தமான ஒன்றே. அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணி கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தோனி சொல்லியிருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக்கி உள்ளது அணி நிர்வாகம். 40 வயதை எட்டியுள்ள தோனி தனக்கு பிறகு சென்னை அணிக்கு சரியான தலைவனை தர வேண்டும், குறிப்பாக தான் விளையாடும் காலத்திலேயே உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. தலைவனாக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற விராட் கோலியின் கருத்து தோனிக்கு சரியாக பொருந்தும். யார் கேப்டனாக இருந்தாலும் தோனி விளையாடும் வரை அவரே தலைவன் என்று ரசிகர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.