புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தனது சொத்து கணக்கை வெளியிட தயாரா என அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பா.ஜ.க மகளிர் நிர்வாகிகள் கூட்டம் வரும் சனிக்கிழமை புதுச்சேரியில் தனியார் விடுதியில் நடைபெற உள்ளது என்றும் இதில் பாஜக தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி, தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மகளிரணி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், காந்தி, சுபாஷ்சந்திரபோஸ் கண்ட கனவை பா.ஜ.க ஆட்சியில் நிறைவேற்றி வருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை நாடு முழுவதும் தருகிறோம் என்றும் இதனால்தான் கருத்துக் கணிப்புகளை மீறி 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் புதுச்சேரியில் காவல்துறைக்கு நேர்மையான முறையில் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 50 ஆண்டுகளாகப் பின்தங்கியிருந்த புதுவை 10 மாதங்களில் பெஸ்ட் புதுவையாகிவிட முடியாது என்றும் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும்போதுதான் புதுவையின் வளர்ச்சி கண்ணுக்கு தெரியும் என்றார். முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வுக்கு பா.ஜ.க பற்றி விமர்சிக்கத் தகுதியில்லை எனவும் உழல்வாதிகள் என அமைச்சர்களைக் குற்றம்சாட்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது சொத்து கணக்கைக் காட்டத் தயாராக உள்ளாரா எனக் கேள்வி எழுப்பிய அவர் பாஜக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சொத்து கணக்கைக் காட்டத் தயார் என்றார்.







