நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்று திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகள்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்வில் திமுக எம்பிக்கள் சில கேள்விகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்குக : திமுக எம்.பி. தயாநிதி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்வில் திமுக எம்பிக்கள் சில கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்குக : திமுக எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வியில்;

“தனி நபர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் இன்று கேட்டுள்ளார். குறைந்தபட்சம் மூத்த குடிமக்கள் மற்றும் தனிநபர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடுகளுக்கு வரிநீக்கம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜிஎஸ்டி குறைப்பினால் பிரீமியம் விகிதங்களில் மாற்றம் ஏற்படும்போது தொடர்புடைய நிறுவனங்கள் அதை நுகர்வோருக்கு முறையாக வழங்குகின்றனவா என்பதை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) உறுதிசெய்யவேண்டும். மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்குவதன்மூலம் எல்லோருக்கும் சமமான சுகாதார பாதுகாப்பு கிடைக்க அரசு வழிசெய்ய இயலும்,” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சிலைக் கடத்தலை தடுக்க கோரிக்கை : மக்களவையில் இன்று கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ;

“தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் அமலாக்கத்துறையில் பதிவுசெய்யப்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும். இதுவரை கடத்தப்பட்ட சிலைகள் எந்தெந்த கோவில்களை சேர்ந்தவை மற்றும் அவற்றின் மதிப்பு விவரங்கள் உள்ளடங்கிய பட்டியல் வெளியிட வேண்டும்.சிலைத் திருட்டை தடுப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட/குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் விவரங்கள் மற்றும் அவ்வழக்குகளின் இன்றைய நிலையை வெளியிட வேண்டும். சிலைக் கடத்தல் வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூப்பிக்கப்பட்டு சட்டப்படி தண்டனை பெற்றுள்ள மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் பட்டியலையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்,”என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : கனமழை, வெள்ளம் எதிரொலி | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலூரில் ESI மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வேண்டும் : மக்களவையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கதிர் ஆனந்த் :

“இஎஸ்ஐயின்கீழ் காப்பீடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ESI மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை நிறுவ வேண்டும். மேலும் வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பேட் ஆகிய இடங்களில் உள்ள இஎஸ்ஐ மருந்தககங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்,” என்றும் கேட்டுள்ளார்.

தர்மபுரி காளிகரம்பில் சாலை வசதி வேண்டும்: இது தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக எம்பி அ.மணி,

“தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பிளாக், கொண்டகரஹள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள காளிகரம்பு வனப்பகுதி வழியாக சாலை அமைக்க அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். இத்திட்டம் நிறைவடைந்தால் பாப்பிரெட்டிப்பட்டி, பைரநத்தம், மெணசி, துருஞ்சிப்பட்டி, பொம்மிடி, மணலூர், கொப்பக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் பயணம் சுமார் 30 கி.மீ., குறையும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தமிழ்நாடு தருமபுரி மாவட்டம் கொண்டகரஹள்ளி பஞ்சாயத்தில் அமைந்துள்ள காளிகரம்பு வனப்பகுதிக்கு பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலை இணைப்பு வழங்கவேண்டும்,”என கோரிக்கை வைத்துள்ளார்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.