தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி முதன்முதலாக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் வாரிசு திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பது குறித்து பார்க்கலாம்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வசூலை குவித்தாலும் விமர்சன ரீதியாக நடிகர் விஜய்க்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் வம்சி உடன் கூட்டணி அமைத்து விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வாரிசு படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய்யுடன் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, சங்கீதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடும்ப உறவையும், அதன் பின்னால் இருக்கும் சிக்கலையும் மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. பிசினஸ் தான் தன்னுடைய குடும்பம், வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை சரத்குமார், தனது மூன்று மகன்களான ஶ்ரீகாந்த், ஷ்யாம், விஜய் ஆகியோரில் யாருக்கு திறமை உள்ளதோ அவர்களை தன்னுடைய பிசினஸின் அடுத்த வாரிசாக அறிவிக்க திட்டமிடுகிறார். ஆனால் தந்தையின் வழியில் பிசினஸ் செய்ய விருப்பம் இல்லாத விஜய் சுயமாக தொழிலை செய்ய முயற்சி செய்கிறார். இதனால் கோபமடைந்த சரத்குமார் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரியவகை புற்று நோயால் பாதிக்கப்படும் சரத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பார். ஒரு புறம் மகன்களுக்கு இடையில் ஏற்படும் போட்டி மற்றொரு புறம் பிசினஸ் பிரச்சனை என நிலை தடுமாறும் சரத்குமாரையும் தனது குடும்பத்தை விஜய் எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை தனி ஒருவராக ஒட்டு மொத்த படத்தை விஜய் தன்னுடைய முதுகில் சுமந்து செல்கிறார். 90களில் பார்த்த துரு துருப்பான, இளமையான விஜய்யை இந்த படத்திலும் பார்க்க முடிகிறது. குறிப்பாக யோகி பாபு உடன் செய்யும் நகைச்சுவை காட்சிகளும் ராஷ்மிகா விஜய் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. வசனங்களிலும், காட்சிகளிலும், ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தமாக விஜய் இப்படத்தில் தெரிகிறார். குறிப்பாக பாடலுக்கு விஜய் ஆடும் நடனம் ரசிகர்களையும் நடமாட வைக்கிறது.
ஆக்சன் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கிறது. ஆல் ரவுண்டராக தனது கொடுக்கப்பட்ட அனைத்தையும் விஜய் சிறப்பாக செய்து முடித்துள்ளார். விஜய்க்கு அடுத்து, படத்தின் பெரிய பலமாக இருப்பது சரத்குமார் மற்றும் பிரகாஷ்ராஜின் நடிப்பு தான். தந்தையாக சரத்குமார் அன்பை பொழிவதும் கண்டிப்பான தந்தையாகவும் நடந்து கொள்வது சிறப்பு. அதே போல மற்றொரு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு வில்லனாக வரும் காட்சிகளில் பல தெலுங்கு படங்களின் சாயல் இருந்தாலும், சற்று வில்லத்தனமும் இருக்கிறது.
காதலியாக வரும் ராஷ்மிகா தனக்கு கொடுத்து கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு இணையாக நடனமாடி அனைவரையும் ஈர்த்துள்ளார். விஜய்யுடன் இணைந்து யோகிபாபு செய்யும் நகைச்சுவை ரசிக்க வைத்துள்ளது. யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் பெரிய பிளஸ் என்று தான் சொல்ல வேண்டும்.
பாடல்களில் அதிக கவனம் செலுத்திய இசையமைப்பாளர் தமன் பின்னணி இசையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. பின்னணி இசை சில இடங்களில் சரியாக இருந்தாலும் சில இடங்களில் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை.
இந்த படத்தின் மிகப்பெரிய தூண் என்றால் அது இயக்குனர் வம்சி தான். குடும்ப உறவை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் விஜய் என்னும் மிகப்பெரிய நடிகரை வைத்து குடும்ப உறவு முறைகளை தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக வடிவமைத்து கொண்டு சென்றுள்ளார். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் இருந்தாலும் பல இடங்களில் தெலுங்கு திரைப்படங்களை பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம் என்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒரு நெகட்டிவ் ஆக அமைந்துள்ளது. முதல் பாதியில் மூன்று பாடல்களும் இரண்டாம் பாதியில் இரண்டு பாடல்களும் என ஒரு பெரிய கமர்சியல் படமாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்திருந்தாலும் சில இடங்களில் பாடல்கள் நம்மை சோர்வடைய செய்கிறது. சற்று திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
ஒரு சில குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையில் வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
– தினேஷ் உதய், நியூஸ்7 தமிழ்.