பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கு பிறகு தமிழ் திரைத்துறையின் இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவுடன் இரண்டு படங்களும் வெற்றி வேட்டை போடும் நிலையில் துணிவு படம் எப்படி உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது துணிவு படம். போனி கபூரின் குறைவான பட்ஜட்டில் எந்த அளவிற்குப் படத்தை முழுமையாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு இயக்கி உள்ளார் வினோத்.
ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித் தான் வங்கியில் கொள்ளையடிப்பார் என்று எண்ணி இருப்போம். ஆனால் படம் ஆரம்பிக்கும் போதே ட்விஸ்ட். கொள்ளையடிக்க வந்த கும்பலுக்கு சர்ப்ரைஸ் ஆக இந்த வங்கி ஏற்கனவே கொள்ளை போய்விட்டது என்னிடம் என அஜித் கூறுவார். போக போக தான் தெரியும் அஜித் எதற்காக அந்த வங்கிக்குள் நுழைவார் என்று.
படத்தின் முதல் பாதியில் என்ன கதையென்றே தெரியாது ஆனால் படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வம் நம்மை இழுத்துச் செல்லும். 2ம் பாதியில் தான் கதையின் களம் காண்கிறது துணிவு.
2ம் பாதியில் வங்கியில் நடக்கும் நூதன மோசடிகள் பற்றி விரிவாக இயக்குநர் H.வினோத் விழிப்புணர்வு ஏற்படுவதிருக்கிறார். மியூச்சுவல் ஃபண்ட்ஸ், கிரெடிட் கார்ட் உள்ளிட்ட விவகாரங்களைத் துணிச்சலோடு தொட்டுள்ளார். இது போன்ற வங்கிகளின் சேவைகளைத் தெரியாமல் பயன்படுத்தும் மக்களின் நிலையை அப்பட்டமாக எடுத்துரைக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் சமூகத்திற்குத் தேவையான சில டையலாக் படத்தை வேறலெவலுக்கு கொண்டு செல்கிறது.
படத்தில் ஜிப்ரானின் இசை ரொம்ப ரசிக்க வைத்தது. சில்லா சில்லா, கேங்ஸ்டா பாடல்கள் ஆடியோவாக வெளியான போது சில தரப்பு ரசிகர்களை கவரவில்லை. ஆனால் திரையரங்கில் அந்தப் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற வேண்டுமானால் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் மனதில் நிற்க வேண்டும். துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் நின்றுள்ளது.
அஜித் இப்படம் முழுக்க செம்ம ஜாலியாக உள்ளார். அதே போல் ஸ்டைல் நாயகனாக உலா வருகிறார். அதேபோல், வில்லனின் மிரட்டலான ஆக்ஷன் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. மஞ்சு வாரியர் தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பில் தன்னுடைய தனித்துவத்தைக் காட்டியுள்ளார்.
படத்தில் செல்லியடிக்கும் வசனங்கள்:
அஜித் – ரூ.1000 திருடுறவன அடிக்கிறீங்க ரூ.1000 கோடி திருடுறவன விட்டுடுறீங்க.
போலீஸ்- இது எங்க தமிழ்நாடு இங்க வந்து உன் வேலைய காட்டாத.
அஜித் – மக்கள் கிட்ட போய் சொல்லுங்க ஏமாந்து தற்கொலை பன்றது அழகில்ல.
Guts இல்லனா Glory இல்ல.
மொத்தத்தில் அடர்த்தியான கருத்தை, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் ஹீரோ ஒருவரின் வழியாக சொல்ல முனைந்திருக்கிறது படம். நொடிக்கு நொடி எனர்ஜியை கொடுக்கும் இப்படம் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், துணிவு பொங்கலா வாரிசு பொங்கலா என்று கேட்டால் அது ரசிகர்களின் சாய்ஸ் ஆக அமையும்.
-சுஷ்மா சுரேஷ்







