அதிமுக பொதுக்குழு நடக்குமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

வரும் 11ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது.…

வரும் 11ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. உட்கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கிய போது இந்த பொதுக்குழு நடத்த இடைக்காலத் தடை கேட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுகவில் புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. எனவே 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் நிறைவேற்ற முடியாமல் போனது.

மேலும், தமிழ்மகன் உசேனை நிரந்த அவைத்தலைவராக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போதே மேடையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து அடுத்த பொதுக்குழு வரும் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவு நடத்தக்கூடாது என தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அ.தி.மு.க., பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் இயற்றக்கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, தமிழ் மகன் உசேனை அ.தி.மு.க.வின் நிரந்தர அவைத்தலைவராக நியமித்து புதிய தீர்மானத்தை இயற்றியுள்ளனர். அவைத்தலைவர் நியமனமே சட்டவிரோதம் என்ற நிலையில், வருகிற 11-ந்தேதி பொதுக்குழுவை அவர் கூட்டுவதும் சட்டவிரோதம். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனவே, அந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர முடியாது.

மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பாக அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடைபெற உள்ளதாக கடந்த 4-ந்தேதி அன்று தான் அழைப்பு கிடைத்துள்ளது. எனவே உரிய கட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.