ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா பொம்மியம்பட்டி ஊராட்சி மேல் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் 16 வயது ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பொம்மியம்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
இதே போன்று காடையாம்பட்டி அருகே உள்ள கொங்கரப்பட்டி ஏரி மேடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் என்பவரது மகன் விக்ரம் 21 என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கூலி வேலை செய்வதற்காக அடிக்கடி பொம்மியம்பட்டி பகுதிக்கு வரும் பொழுது பதினாறு வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி வீட்டில் இருந்து காணாமல் போனார்.
இது குறித்து அவரது தாயார் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொங்கரப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த விக்ரம் என்ற வாலிபரை கைது செய்து 16 வயது சிறுமியை மீட்டனர். தொடர்ந்து தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பொறுப்பு இந்திரா 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் விக்ரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்ததை தொடர்ந்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.








