அவர் வந்தார்… 600 பக்க அறிக்கையை சமர்பித்தார்… கட்சிக்கு புத்துயிர் கொடுக்க போகிறார்…2024 தேர்தலில் கட்சியை அரியணையில் அமர வைப்பார்… என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அவர் மௌனமாக ஒதுங்கிவிட்டார். அவர் என்ன பேசினார்? அவர் அளித்த அறிக்கையில் என்ன இருந்தது? கட்சி சீர்திருத்தத்திற்காக அவர் முன்வைத்த யோசனைகள் என்ன? எதுவுமே நமக்கு தெரியாது? காங்கிரஸ் கட்சியை புத்துயிர் பெறுவதற்கான பிரசாந்த் கிஷோரின் சமீபத்திய முயற்சியை இப்படித்தான் விவரிக்க வேண்டி இருக்கிறது.
புத்துயிர் பெறும் காங்கிரஸ்:
பிரசாந்த் கிஷோரின் முயற்சியாலா? அல்லது தற்போதைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் காங்கிரஸ் என்ற கட்சி அரசியல் அரங்கில் காணாமல் போய்விடும் என்பதாலா? தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் தன்னை புத்துயிர்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டது.
பல மாநில தேர்தல்களில் தொடர் தோல்வி, காங்கிரஸ் சீர்திருத்தம் தொடர்பாக சிந்தனை அமர்வை ராஜஸ்தானின் உதய்பூரில் அக்கட்சி நடத்தி முடித்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் நோக்கில், ஒரு நபர் – ஒரு பதவி, ஒரு குடும்பம் – ஒரு சீட் ஆகிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளன. அதாவது, தேர்தலில் போட்டியிட ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு அளிக்கப்படும். இரண்டாவது நபருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமானால் அவர் 5 ஆண்டுகள் கட்சிப் பணியாற்றியிருக்க வேண்டும்.
மேலும், காங்கிரஸ் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக தனி பணிக்குழு உருவாக்கப்படும். அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவருக்கென தனி ஆலோசனைக்குழு உருவாக்கப்படவும் உள்ளது. கட்சியின் அனைத்து நிலைகளிலும் 50 சதவீத பொறுப்புகள், 50 வயதுக்கு குறைவாக உள்ளோருக்கு வழங்கப்படும். மக்கள் எண்ணமறிதல், தேர்தல் மேலாண்மை, தேசிய பயிற்சி ஆகிய 3 துறைகள் கட்சிக்குள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில கட்சிகள் ஒருங்கிணைப்பு :
2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்றால், இரண்டு விஷயங்களில் காங்கிரஸ் தன்னை மறுகட்டுமான செய்ய வேண்டி இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் சிந்தனை அமர்வில் பேசிய ராகுல் காந்தி, மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் புள்ளியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்றார். இன்றைய சூழலில் காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடுகையில் மாநில கட்சிகளான, திமுக, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பலமாக உள்ளன. திமுக, சிவசேனாவைத் தவிர இந்த பிற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வளர்ந்து இன்று மாநிலங்களில் அதிகாரம் செலுத்தும் கட்சிகள் தான். இதனை காங்கிரஸ் தேச நலன் என்ற பெயரில் ஒன்றிணைக்கும் பட்சத்தில் எளிதாகவே காங்கிரஸ் அரியணை ஏரளாம்.
2004 பொதுத் தேர்தலில், காங்கிரஸ் 145 இடங்களைப் பெற்றது. அதே தேர்தலில் பாஜக 138 இடங்களை கைப்பற்றியது. பாஜகவை விட காங்கிரஸ் வெறும் ஏழு இடங்கள் அதிகம். தேர்தலுக்கு பின்பு சமாஜ்வாதி (39) ராஷ்டிரிய ஜனதா தளம் (21) திமுக (16) தேசியவாத காங்கிரஸ் கட்சி (09) கேரளா காங்கிரஸ் (02) பாட்டாளி மக்கள் கட்சி (06) மதிமுக (04) லோக் ஜன்சக்தி (03) ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (01) இந்திய குடியரசுக் கட்சி, இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடங்கள் என மொத்தம் 275 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் அரியணை ஏறியது. இதில், கவனிக்க வேண்டிய அம்சமே, பாஜகவை விட வெறும் 7 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் அரியணை ஏறுவதற்கு மாநில கட்சிகளின் உதவி பலமாக இருந்தது. மாநில கட்சிகளின் அதிருப்தியை காங்கிரஸ் ஒருங்கிணைக்கும் புள்ளியாக தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதை செய்தால் தான் ஒருங்கிணைப்பு புள்ளியாக காங்கிரஸ் மாற முடியும்.
ஒரு பிளவை காங்கிரஸ் சந்திக்க வேண்டும்:
காங்கிரஸ் தன்னை இன்னும் பலமான கட்சி அமைப்பாக வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அது இரு பிளவை சந்திக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் பிளவு படுகிறதோ அப்போதெல்லாம் அது பலம் பொருந்திய கட்சி அமைப்பாக உருவெடுத்துள்ளதை கவனிக்கலாம்.
ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் பிளவை சந்தித்தது. அதிக பொருளாதார சுதந்திரம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என சோசலிஸ்டுகள், தாராளவாதிகள் கருத்துக்களை முன்வைத்தனர். இது பின்னர், சி. ராஜகோபாலச்சாரி தலைமையில் சுதந்திரா காங்கிரஸ் ஆக உருவெடுத்தது. இந்த விளைவு, காங்கிரஸ் கட்சியில் நேரு பிடியை வலுப்படுத்தியது. பின்னர், நேருவின் மகள் இந்திரா காந்தி காலத்திலும் கூட காங்கிரஸ் ஒரு பிளவை சந்தித்தது. அதிலும், இந்திரா காந்தி சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்தார். 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்திய படைகள் தீர்க்கமாக போரிட்டு வெற்றி பெற்றது. இது, இந்திராவை இந்தியாவின் இரும்பு பெண்மணியாகவும், காங்கிரசின் அசைக்க முடியாத சக்தியாகவும் உயர்த்தியது.
அர்ஜுன் சிங், என்.டி. திவாரி மற்றும் ஷீலா தீட்சித் போன்ற மூத்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட மற்றொரு பிளவை காங்கிரஸ் கண்டதையும் மறந்துவிட முடியாது. சரத் பவார் மற்றும் பி.ஏ சங்மா போன்ற வலுவான பிராந்திய தலைவர்கள் பிளவை ஏற்படுத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது என்பது மற்றொரு கதை. மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் இடதுசாரி முன்னணியை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸில் இருந்து விலகினார். இந்த பிளவுகளை சந்தித்த போதெல்லாம் காங்கிரஸ் கட்சி வலுவான கட்சி அமைப்பாக உருவெடுத்தது.
தற்போது, காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததும், வலுவான தலைவரை உருவாக்க தவறியதும் காரணமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக்கொள்ள தெளிவான சிந்தனை கொண்ட கருத்திய கட்சியாக உருப்பெறவும், ஆளுமை மிக்க தலைவர்களைக் கொண்டு கட்சியைக் கட்டமைக்கவும் வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநர்களுடன் மோதும் மாநில கட்சிகள்:
மாநில உரிமைகள் என்ற அடிப்படையில் பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆளுநர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தெலுங்கானாவில் முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆளுநர் தமிழிசைக்கு எதிராக கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் இதேபோல் ஆளுநர் ஜக்தீப் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையில் மோதல் ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அம்மாநிலத்தில் 12 எம்எல்சி நியமனத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட துணை வேந்தர் நியமன மசோதாவிற்கும் ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த பின்னணியில் பார்த்தால், பாஜக ஆளாதா மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக மறைமுகமாக ஆட்சி செய்கிறது. இதனை, எதிர்கொள்வதற்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பு புள்ளியாக உருவெடுக்கும் பட்சத்தில் சக்தி வாய்ந்த ஒருங்கிணைப்பு மையமாக காங்கிரஸ் மாறும்.
பாஜகவில் பிளவா ? உட்கட்சி பூசலா?:
அண்மையில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னரும் உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில முதலமைச்சர்களை நியமிப்பதில் பாஜகவில் இழுபறி நீடித்தது. தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் ஒரு கட்சி முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிப்பதற்கு காரணம் உட்கட்சி பூசலாக இருந்தது. திரிபுராவின் முதலமைச்சர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். இதே போல், கர்நாடகாவில் எடியூரப்பா நீக்கப்பட்டு பசவராஜ் பொம்மை முதலமைச்சராக நீடிக்கிறார். இதற்கும், பாஜகவில் இருக்கும் உட்கட்சி பிரச்னை காரணமாக காட்டப்பட்டது.
மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா, திரிபுராவின் இந்த அரசியல் அதிருப்தியை காங்கிரஸ் சரியாக கையாண்டால் வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். இது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
தனது உட்கட்சி சீர்திருத்தத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் மாநிலங்களில் தங்களின் பலம் பலவீனங்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அதன் அரசியல் எதிர்காலம் வலுவாக மாறும்.







