ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூக விரோதிகள் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுக் குழுவைத் தடுக்க சமூக விரோதிகளை தூண்டி விடுவதற்கும் வாய்ப்புள்ளது ‌.
கடந்த 23 ம்தேதி போல் அல்லாமல், 11 ம்தேதி காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுதொடர்பாக, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நேரடியாக சந்தித்து மனு அளித்தேன்.

கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த முறை காவல்துறை அதனை சரி செய்ய வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
அப்போது கட்சி விதிமுறை மீறினால் ஓ.பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், “தொண்டருக்கு ஒரு விதி, தலைமைக்கு ஒரு விதி அல்ல. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் ஜெயக்குமார்.

இதனிடையே, ஜூலை 11 இல் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் எனக்கு கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையீடு வைத்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.