வழக்கமான சினிமாவின் பாதையிலிருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான புதையலை தேடிய கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி.
அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மாஸ்கோவைச் சேர்ந்த கெசன்யா என்கிற மாடல் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏலியன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.வி. முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார் . ஆனந்த் மற்றும் உன்னி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளனர்.
செஞ்சி என்றாலே அதில் உள்ள மர்மங்களும் புதைக்கப்பட்ட வரலாற்று அதிசயங்களும் தான் நினைவிற்கு வரும். அதை நினைவூட்டும் வகையில் செஞ்சி என்று இந்த படத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. செஞ்சிக்கோட்டையில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையல் இருக்கிற இடம் பற்றிய ரகசியத்தை அறியும் குறிப்புகள் இக்கால மனிதர்களுக்குக் கிடைக்கிறது. கால மாற்றங்களுக்குப் பிறகு இவர்கள் அடைந்திருக்கும் அறிவால் அதை அறிய முடிகிறதா?அந்தப் புதையல் என்ன? என்று தேடிச் செல்கிற பயணத்தில் பல திடுக்கிடும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. அதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்திற்காகச் செஞ்சிக்கோட்டை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், கேரளா போன்ற பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. வழக்கமான சினிமாவில் இருந்து விலகி நின்று ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நிச்சயம் இந்தப் படம் திருப்தி தரும் என படகுழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
– தினேஷ் உதய்









