மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதால் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி சேதமடைந்தன. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி…

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதால் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி சேதமடைந்தன.
களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் பரவி வரும் காட்டுத் தீயினால் மூலிகை செடிகள், மரங்கள் கருகி வருகின்றன. தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது களக்காடு மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருவதாலும், மழை பெய்யாததாலும் அருவிகள் மற்றும் நீரோடைகள் வறண்டு வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில், ஜூன் 10 ஆம் தேதி, கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது.  காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், பகல் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. வடகரை பீட் வனப்பகுதியில் பற்றிய தீ காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மள, மளவென பரவி எரிந்து மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
இந்த தீயினால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் கருகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் ஐபதிற்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர கொம்புகளை வைத்து அடித்தும், மண், கற்களை அள்ளி போட்டு, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வட திசையை நோக்கி பரவி வரும் தீ கட்டுக்குள் வராமல் பரவி வருவதால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.  காட்டு தீ விபத்துக்கு மர்ம நபர்களின் சதிவேலை காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.