சிவகங்கை அருகே 100 நாள் பணியில் இருந்தவர்களை மலைத்தேனீ கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் பஞ்சாயத்திற்குட்பட்ட ஐம்பதிற்க்கும் மேற்பட்ட பெண்கள் சக்கந்தி கிராமத்தை ஒட்டியுள்ள மனக்குளத்து முனியாண்டி கோவில் அருகே 100 நாள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் அங்கிருந்த குப்பைகளுக்கு தீ வைத்தபோது அருகிலிருந்த மரத்தில் மலைத்தேனீ கலைந்ததுடன், வேலை செய்துகொண்டிருந்த பெண்களைக் கொட்டத்தொடங்கியது.
இதில் சுமார் முப்பதிற்க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயமடைந்த பெண்களைக் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க மாவட்ட துனை செயலாளருமான மணிமுத்து நலம் விசாரித்து சென்றதுடன், மருத்துவர்களுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கவும் பரிந்துரை செய்தார்.
சௌம்யா.மோ







