கூடலூர் ஓவேலி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் ட்ரோன் கேமராக்களை கொண்டு அதன் நடமாட்டத்தை கண்டறிந்து, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான பார்வுட், எல்லமலை, சீபுரம், ஆருற்றுப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களின் அருகே உலா வந்து காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்தில் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டுயானை தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனியார் தேயிலை தோட்டத்தின் காவலாளியாக பணிபுரிந்து வந்த நெளஷாத் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு நபர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஓவேலி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் OVT 1 ராதாகிருஷ்ணன் என்ற அழைக்கப்படும் கொம்பன் காட்டுயானையை அதிநவீனம் ட்ரோன் கேமராக்களை கொண்டு வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
மேலும் காட்டு யானை கிராமப் பகுதிக்குள் நுழையாமல் இருக்க விஜய் மற்றும் பொம்மன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன், 40-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை விரட்டும் குழுவினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .
இந்தநிலையில் மூலக்காடு ஆற்றோரம் பகுதியில் OVT 1 எனப்படும் ராதா கிருஷ்ணன் காட்டு யானை முகாமிட்டிருப்பதை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறிந்த வனத்துறையினர், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளின் அருகே வராமல் இருக்க, இரு கும்கி யானைகளை கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் மாலை மற்றும் காலையில் காட்டு யானை கிராம பகுதிக்குள் நுழையாமல் இருக்க இரவு நேரம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா