சென்னை எழும்பூரில், வீதி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பேரணி நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது, “தமிழ்நாட்டில் இப்போதுதான் ஒரு புரட்சி நடந்திருக்கிறது. முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் பலர் நுழைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுப்போம். அவர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் முதலில் விமர்சிப்பவர்கள் நாமாகத்தான் இருப்போம்.
இந்த மேடையில் நான் ஒரு உண்மையை போட்டு உடைக்க விரும்புகிறேன். நான் பிஜேபியில் இருந்து ராஜினாமா செய்யும் சமயத்தில் அமித் ஷா என்னை அழைத்து டெல்லியில் பொறுப்பு வகித்துக்கொள்ளுமாறு சொன்னார். நான் தமிழ்நாட்டிலேயே இருந்துகொள்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை ஒரு Principle-ஓடத் தான் எப்போதும் அரசியலை செய்திருக்கிறேன். பின்வாசல் வழியாக அதிகாரத்திற்கு சென்று, அந்த அதிகாரத்தை அனுபவிப்பது மகா பாவம், மகா தவறு. அது நமக்கு வேண்டாம், மக்களுடன் இருந்து, நேர்மையாக பணி செய்வோம்; தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான அமைப்பாக வீ த லீடர்ஸ் இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.
வீ த லீடர்ஸ் அமைப்பு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கிறது. பிரதமர் மோடியை நான் நம்புகிறேன். அவர் நேர்மையான மனிதர், தவறு செய்யாத மனிதர், எனவே அவர் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்க்க யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இரு மாநில முதலமைச்சர்களையும் அமர வைத்து பேச வேண்டும். முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பட்ஜெட்டில் ரூ.15,000 கோடி சேமித்துள்ளீர்கள். நீங்கள் மிச்சம் பிடித்த பணத்தில் ரூ.5000 கோடியை தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்குங்கள், பெரிய மாற்றம் நடக்கும்.
ஊழலை ஒழிப்போம் என்று சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார். ஊழலை நம்முடைய காலத்தில் ஒழிப்போம் முதல்வர் அவர்களே, கொஞ்சம் கடிவாளம் போடுங்கள். சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள், இல்லையென்றால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் குளிர்விட்டுப் போய்விடும்.
நம்முடைய உழைப்புக்கு கிடைக்க கூடிய ஊதியம் வாக்குகள் இல்லை, மக்களுடைய புன்னகைதான். 2030 முடியும் போது இரண்டரை கோடி பேர் டெலிவெரி பாயாக இருப்பார்கள் என்று நிதி ஆயோக் சொல்கிறது, இப்படி இருந்தால் நாடு தாங்குமா, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியதுதான் நம்முடைய அரசியல்.




