முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

பட்ஜெட் வரலாறு: பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டதன் பின்னணி என்ன?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

மத்திய பட்ஜெட் வரலாற்றில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு மிகப்பெரும் திருப்பம் நிகழ்ந்தது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து 92 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நடைமுறை ஒன்று அப்போது மாற்றியமைக்கப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யும் வழக்கத்தை அந்த ஆண்டு பாஜக தொடங்கி வைத்தது. இதன் பின்னணி என்ன?

பட்ஜெட் விஷயத்தில் பல்வேறு   நடைமுறைகள் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மாற்றி அமைக்கப்பட்டன. நிதி நிலை அறிக்கை பொதுவாக பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்படுவது ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை பிப்ரவரி 1ந்தேதியாக மாற்றியது பாஜக அரசு. கடந்த 2017ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ந்தேதி அன்று மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 மேலும் பட்ஜெட் தாக்கல் நடைமுறையில் மிகப் பெரும் திருப்பம் ஒன்றும் பாஜக ஆட்சி காலத்தில் நிகழ்ந்துள்ளது. அது ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது. 2017ம் ஆண்டு முதல் பொதுபட்ஜெட்டுன் இணைத்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 1920களில் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரயில்வேத்துறை பெரும் பங்கு வகித்தது. இதனைக் கருத்தில் கொண்டு 1924ம் ஆண்டு ரயில்வேத்துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் நாட்டின் பல்வேறு துறைகளும் வளர்ச்சியடைந்து பொதுபட்ஜெட் விஸ்வரூபம் அடைந்தது. அதை ஒப்பிடும்போது ரயில்வே பட்ஜெட் மிகவும் சுருங்கிக் காணப்பட்டது. எனினும் ரயில்வேத்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்வது பாரம்பரிய நடைமுறையாகத் தொடர்ந்து வந்தது. இந்நிலையில்தான் 2016ம் ஆண்டு அந்த அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. பட்ஜெட் தாக்கல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு ஆலோசித்து வந்த நிலையில் Bibek Debroy தலைமையிலான நிதி ஆயோக் குழு ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ரயில்வேத்துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்த அனைத்து நாடுகளும் அதனைக் கைவிட்டு விட்டதாகவும் இந்தியா மட்டுமே அதனை கடை பிடித்துவருவதாகவும் நிதி ஆயோக் கமிட்டி சுட்டிக்காட்டியது. பாதுகாப்பு, சாலை போக்குவரத்து,பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற துறைகள் ரயில்வே துறையைவிட அதிக செலவினங்கள் கொண்டுள்ளன.அந்த துறைகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாதபோது ரயில்வேத்துறைக்கென தனி பட்ஜெட் ஏன் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

மேலும் ரயில்வே பட்ஜெட் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்படுவதாக தொடர்ச்சியாக எழும் குற்றச்சாட்டுக்களையும் நிதி ஆயோக் குழு தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியது. 1989ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வரையிலான காலக்கட்டங்களில் மத்திய கூட்டணி ஆட்சிகளில் மாநிலக்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இந்நிலையில் ரயில்வேத்துறையை கேட்டுப்பெறும் மாநிலக்கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சொந்த மாநிலத்தில் செல்வாக்கை அதிகரிக்க ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தங்கள் மாநிலத்திற்கே அதிக திட்டங்களை கொண்டு சென்றுவிடுவதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது.   இவ்வாறு அடுக்கடுக்கான காரணங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து 2017ம் ஆண்டு தாக்கல் செய்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்கிற பெருமையை பெற்றிருப்பவர் அருண்ஜேட்லி. இதே போல் நாட்டின் கடைசி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்று வரலாற்றில் நினைவு கூறப்படுபவராக உள்ளார் சுரேஷ் பிரபு.

ரயில்வேத்துறை சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையில் தத்தளித்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்தம் அத்துறையின் சுமையை குறைப்பது போல் அமைந்ததது. பட்ஜெட் உதவிகளுக்காக மத்திய அரசுக்கு வருடத்திற்கு தரவேண்டிய சுமார் 9 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஈவுத் தொகை ரயில்வேத்துறைக்கு மிச்சமானது. ரயில்வேத்துறையின் மூலதன செலவு, நிதிப் பற்றாக்குறை போன்றவற்றை கவனிக்கும் பொறுப்பு நிதித்துறை வசம் சென்றுவிடுவதாகல் ரயில்வே துறை தனது முழுக் கவனத்தையும் வருவாய் ஈட்டுவது, பயணிகளின் பாதுகாப்பு, மற்றும் வசதிகளை அதிகப்படுத்துவது போன்றவற்றில் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டது. மேலும் ரயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட் மசோதாக்கள் மீதான விவாதங்களை தனித் தனியாக நடத்த தேவையில்லை என்பதால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நேரமும் மிச்சமானது.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமெரிக்க ஓபன்: இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

Halley Karthik

விலை குறைவால் காசிமேடு மீன்பிடி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Web Editor

ஓணம் பண்டிகை-கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Web Editor