முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் சந்தித்தது ஏன் ?

அதிமுகவில் யார் பெரிய தலை என்ற பனிப்போர் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் முயற்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சைலன்டாக இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் ஓபிஎஸ் அணியினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் வெளிப்பாடே முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் தொகுதி பிரச்சனைக்காக மனு கொடுக்கிறார். மற்றொரு மகன் ஜெய பிரதீப்போ மூன்று முறை முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த நிகழ்கால பரதனின் ரத்தம்  என்கிறார். அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறார் இராமானுஜம்.  

அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த காலம் வரை திமுகவினருடன் எவ்வித தொடர்பும் வைத்திருப்பதாக தலைமைக்கு புகார் வந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை பாயும். அதே பாலிசியை கையில் எடுக்கலாமா ? என எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறாராம். முடிந்தால் நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும் முஷ்டியை தூக்க தொடங்கிவிட்டனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓபிஎஸின் மூத்த மகன் ரவீந்திரநாத் முதலமைச்சரை சந்தித்தார் என்றால்,  இரண்டாவது மகன் ஜெய பிரதீப், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸின் படங்களை சிறிதாக பெயரளவில் போட்டுவிட்டு, ஜெயபிரதீப்பின் படங்களை பெரிதாக போட்டு பேனர்கள் வைத்துள்ளனர். இதனை அதிமுகவின் ஐடி விங் மாநில நிர்வாகி ராஜ் சத்தியன் என்பவர் தலைமைக்கு புகாராக தட்டிவிட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் விசாரணையும் நடைபெற்றதாக தெரிகிறது.

இப்பிரச்சனை தொடர்பாக பேஸ் புக்கில் தன்னிலை விளக்கம் கொடுத்த ஜெய பிரதீப், ’ராமநாதபுரம் மாவட்டத்தில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றியும், நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் பற்றியும் புகார்கள் தலைமையிடம் சில சகோதரர்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டது என்றும், அதை முன்னிட்டு கலந்து கொண்டவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் கேள்விப்பட்டேன்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதில் பல்வேறு விஷயங்களை பற்றி பேசியிருந்தாலும், அவற்றில் முக்கியமானவற்றை உங்களுக்கு தருகிறோம். ’இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் மாவட்ட நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக நான் தெரிவிக்கவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் மருது அவர்கள் எனது குடும்ப நண்பர் என்பதால் அவரிடம் மட்டும் தெரிவித்துவிட்டு, மாவட்ட செயலாளர் அவர்களிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து யாரும் வர வேண்டாம் எனக் கூறியிருந்தேன். நான் வருவதை அறிந்து என்னுடைய நண்பர்கள் ஒரு சிலர் அன்பின் காரணமாக எனது புகைப்படத்தை வெளியிட்டு சால்வை, மாலை அணிவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அவர் பேஸ் புக்கில் எழுதிய வாசகமே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது  ‘,நான் புரட்சித தலைவர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் கொள்கைகளை உயிராக மதிப்பவன் ! மூன்று முறை முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த நிகழ்கால பரதனின் ரத்தம் !’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார்த்தைதான் எடப்பாடியை நேரடியாக சீண்டுவதுபோல் உள்ளதாக ரத்தத்தின் ரத்தம் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.இவற்றையெல்லாம் கூறிவிட்டு, எனது புகைப்படத்தைப் பார்த்து ஒரு சிலருக்கு மனம் வேதனைப்பட்டிருந்தால் அவர்களிடத்தில் நான் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் ஜெயபிரதீப்.

இதனுடைய நீட்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்களும், மருத்துவ மனை ஊழியர்களும் அவரிடம், இந்த மருத்துவனைக்கு 8 மருத்துவர்கள் வரை பற்றாக்குறையாக உள்ளது. இதனை சரி செய்ய உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், என் தொகுதி மக்களின் பிரச்சனைக்காக முதலமைச்சரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து தீர்வு காண முயற்சி செய்வேன் எனக்கூறினார். அது அங்கு அவருடன் இருந்த அதிமுகவினருக்கே அதிர்ச்ச்சியாக இருந்துள்ளது அதற்கு காரணம் அந்த பிரச்சனை திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உருவான பிரச்சனையல்ல. கடந்த 8 ஆண்டுகளாக உள்ள பிரச்சனை என அதிமுகவினர் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் முதலமைச்சர் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மற்றொரு கருத்தும் அதிமுக தரப்பில் முன் வைக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சைலன்டாக அதிமுக என்ற சாம்ராஜ்யத்தை தனி ஆளாக ஆள ஆசைப்படுகிறார். அதனை விரும்பாத ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அப்பிரச்சனையை  விஸ்வரூபம் எடுக்க வைக்கவே இதுபோன்ற பிரச்சனைகள் மூலம் அவரை சீண்டுகின்றர் எனக் கூறுகின்றனர்.

அதிமுகவில் ஓங்கியிருக்கும் போர் மேகம் எப்போது வெடிக்குமோ ? இதனால் என்ன பிரச்சனைகள் வருமோ என உண்மை தொண்டர்கள் கவலையில் உள்ளனர் என்றால், சசிகலா தரப்போ ஓபிஎஸின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுப்பதாகவே தெரிகிறது.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக – காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

Ezhilarasan

ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்

Gayathri Venkatesan

ரேஷனில் அதிக பொருட்கள் வேண்டுமென்றால் 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: உத்தரகாண்ட் முதல்வர்

Halley Karthik