கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை சென்றார்.கோவை வ.உ.சி மைதானத்தில் அகழாய்வுகள் கண்காட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பாக தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக்கண்காட்சியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியில் கீழடி (வைகை நதிக்கரையில் நகர நாகரிகம்), பொருநை (ஆற்றங்கரை நாகரிகம்), கொடுமணல் ( சங்ககால தொழிற்கூடம் ), மயிலாடும்பாறை (4200 ஆண்டுகள் பழமைய இரும்பு காலப்பண்பாடு) ஆகியவை இடம் பெற்றிருந்தன. இக்கண்காட்சியை 25ம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கோவை அவினாசி சாலையில் உள்ள நஷ்டத்திர விடுதியில் நடைபெற்ற தொழில்அமைப்புகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கொடிசீயா, சீமா, சைமா, ஐசிஐ, காட்மா உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மு அன்பரசன், தொழில்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், குணத்தால், மணத்தால் இதமான கோவைக்கு நான் வந்திருக்கிறேன். கோவை மக்கள் தொடாத துறையும், அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை. தற்போது கோவை தகவல் தொழில்நுட்பத்துறையிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவை மாவட்டத்திற்கும், மேற்கு மண்டலத்தின் முன்னேற்றதிற்கு கோவை விமான நிலையம் முக்கியமான ஒன்றாகும் என கூறினார்.
மேலும், கோவை விமான நிலையத்தை உலகத்தரத்தில் உயர்த்தும் பணியை கலைஞர் துவங்கி வைத்ததாகவும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1,132 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தபடும் என உறுதி அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.








