தலைமைச் செயலாளர் அந்தஸ்து முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் ஏன்? யார் யாருக்கு எல்லாம் ஸ்கெட்ச்? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் அந்தஸ்து உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சியமைத்த பிறகு 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாற்றம் செய்யப்பட்ட பலர் மாற்றப்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையிலும் சிலர் மாற்றப்பட்டுள்ளனர் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று என்றாலும், திமுக ஆட்சியமைத்த பிறகு பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய தலைமைச் செயலாளராக இறையன்புவும், சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடியும் நியமிக்கப்பட்டனர். ஆனால், தொழில்துறை, நிதித்துறை, போக்குவரத்துத்துறை என விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே முக்கிய துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களாகப் பல இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். உள்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட பெரிய அளவிலான அதிகாரங்கள் படைத்த துறைகளில் அதிமுக ஆட்சிக்காலத்திலிருந்த ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளே பணியில் தொடர்ந்தனர்.
https://twitter.com/arivazhagancm/status/1535984990970073088
திமுக ஆட்சியமைத்த ஓராண்டுக்குப் பிறகு பெரிய அளவிலான ஐ.ஏ.எஸ் மாற்றம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் மூன்று பேர் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலும் நான்கு பேர் முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலும் இருப்பவர்கள். பெரிய அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் என்றாலும் அதில் சிலர் மாற்றப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்த சிலரிலும் முக்கியமானவர்கள் எஸ்.கே.பிரபாகரும் மற்றும் ராதாகிருஷ்ணன். அதிமுக ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான உள்துறை மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்களாக இருந்த இவர்கள் இருவர் மட்டுமே திமுக ஆட்சி அமைந்த பிறகும் அதே இடத்தில் பணியில் தொடர்ந்தனர்.
முதலமைச்சரின் துறை என்பதாலும், சட்டம் ஒழுங்கை கவனிக்கும் துறை என்பதாலும் உள்துறைக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் அளிப்பது வழக்கமானது. அப்படிப்பட்ட உள்துறை முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர். அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அதாவது எடப்பாடி பழனிசாமி வைத்திருந்த துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரியவர்களின் ஒருவரான எஸ்.கே.பிரபாகர், திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்வது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது உள்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பனீந்திரரெட்டி தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், வணிகவரித்துறை முதன்மைச் செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்போதைய தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இவர் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
அடுத்ததாக மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் முக்கியமானவர் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். கொரோனா பரவல் காலத்தில் இவரின் பணி இன்றியமையாததாக இருந்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயரைப் பெற்றவர் என்பதாலும், சிறந்த களப்பணியாளர் என்பதாலும் சுகாதாரத்துறையின் சிறந்த முதன்மைச் செயலாளராகவும் இருந்தவர். அதிமுக ஆட்சிக்காலத்தில் நல்ல பெயரிலிருந்த இவரை மாற்றுவதற்கு அரசியல் அழுத்தங்களும் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
புதிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளர் செந்தில்குமார் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்துறையில் சிறப்பு அதிகாரி என்ற புதிய இடத்தை உருவாக்கி அதில் அவரை பணியமர்த்தி முக்கியத்துவத்தையும் அளித்துவந்தது திமுக அரசு. புதிய சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது அவரின் தனிச்செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளராக நசிமுதீன், நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ், மெட்ரோ ரயில் இயக்குநராக தீரஜ்குமார் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனந்தகுமார், தரேஷ் அகமது, கோபால சுந்தர்ராஜ், லால்வினா, மரியம் பல்லவி பல்தேவ், பிரகாஷ், பின்கி ஜோவல் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன.
– விக்னேஷ், நியூஸ் 7 தமிழ் சென்னை







