விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்க உள்ளதை பயன்படுத்தி, நெல்லை, திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. இதனால் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்புகின்றனர். ரயில்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த சூழ்நிலையை தக்க வைத்து கொண்டு ஒரு சில தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் 800 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. அதேபோல், திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ஆயிரத்து 500 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ஆயிரத்து 300 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தி மக்களை இன்னலுக்கு ஆளாக்குகின்றனர் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு மட்டுமே என்பதால் ஏராளமான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என தெரிவித்த அவர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மட்டுமே பயணிகள் பயன்படுத்துகின்றதாக தெரிவித்தனர். அரசு பேருந்துகளில் மக்கள் கூட்டம் இருப்பதை பார்த்து தனியார் பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காகா இரண்டு, மூன்று மடங்கு அளவிற்கு கட்டணத்தை உயர்த்தினால் நடுத்தர மக்கள் எவ்வாறு பயணம் செய்ய முடியும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறையை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள் தமிழ்நாடு அரசு தலையிட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண உயர்வு பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் வேதனை தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்








