நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் குறைவான பிரசவங்கள் நடைபெற்ற 8 நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 – வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 34 மாதங்களில் 2,592 பிரசவங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், அதே காலகட்டங்களில் சுமார் 14,291 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் நியூஸ்7 தமிழ் ஆனது செய்தி வெளியிட்டது.
இந்த செய்தி ஒளிபரப்பானதை தொடர்ந்து, அப்போது விசாரணை நடத்தப்பட்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைவான பிரசவம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, குறைவான பிரசவம் நடைபெற்ற கரிசல்குளம், தெற்கு வாசல்,வண்டியூர், விராட்டிபத்து,முனிச்சாலை, அனுப்பானடி,பைக்கார, திருப்பரங்குன்றம் ஆகிய 8 சுகாதார மையங்களில் செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைவான பிரசவம் நடைபெற்றதற்கு காரணம் குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சியின் நகர் நல துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








