முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ரசிகர் மன்றங்களை கலைக்க அஜித் எடுத்த முடிவுக்கு பின்னால் இருந்த காரணம் இதுதானா?

படம் ஓடினாலும் சரி, ஓடாவிட்டாலும் சரி, ரசிகர்மன்றங்கள் செயல்பட்டாலும் சரி, கலைக்கப்பட்டாலும் சரி, அஜித்குமார் செல்வாக்கு மட்டும் குறையவே குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெயரைச் சொன்னாலே அரங்கையே அதிர வைக்கும் ஆர்ப்பரிப்புடன்  ஏ.கே.வின் திரையுலக பயணம் 30 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அஜித்குமார் கதாநாயகனாக அறிமுகமான அமராவதி படம் வெளிவந்து 30 ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. இந்த நேரத்தில் அவர் பற்றி அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய இயக்குநர் சரண் கடந்த காலங்களில் பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்போம். 

“நான் சிரமத்தில் இருக்கும்போதெல்லாம் அந்த மந்திரக்குரல் ஒலிக்கும். எனக்கு உதவும்.” என அஜித்தின் உதவும் குணம் குறித்து சிலாகித்திருப்பவர்  அவரை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சரண். கே.பாலச்சந்தரிடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்த சரண் தனியாக படம் இயக்க நினைத்தபோது, அஜித்தின் கால்ஷீட்டை பெற்றுக்கொண்டு அதன் பிறகு அதை வைத்து தயாரிப்பாளரை தேடலாம் என எண்ணியிருக்கிறார். ஆனால் சரணுக்கு கால்ஷீட் கொடுத்ததோடு அல்லாமல் அவருக்கு தயாரிப்பாளரையும் தேடிக்கொடுத்து இயக்குநராக சரணின் திரையுலக பயணத்திற்கு அஸ்திவாரம் போட்டவர் அஜித்குமார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்கள் கூட்டணியில் உருவான முதல் படமான ”காதல் மன்னன்” 1998ம் ஆண்டு மார்ச் 6ந்தேதி வெளியானது. இந்த படம் ஓரளவிற்கு நல்ல வசூலை கொடுத்திருந்தாலும், படப்பிடிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையே கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் முடங்கிப்போய் இருந்த தயாரிப்பாளரை சரண்தான் அவ்வப்போது வீட்டிற்குச் சென்று  ஆறுதல்படுத்துவராம். காதல் மன்னன் படத்தின் தயாரிப்பாளரை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக உடனடியாக அவருக்கு அடுத்தப்படத்திற்கான கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார் அஜித். அந்த படம்தான் “அமர்க்களம்”. அஜித்தின் 25வது படமான அமர்க்களத்தில் நடிக்கும்போதுதான் அஜித்திற்கும் அவரது மனைவியான ஷாலனிக்கும் காதல் மலர்ந்திருக்கிறது.

இந்த படத்தில் நடிக்க ஷாலினியை இயக்குநர் சரண் அணுகியபோது, முதலில் மறுப்பு தெரிவித்த அவர், கதாநாயகன் அஜித் எனத் தெரிந்ததும் ஒப்புக்கொண்டாராம். ஷாலினியிடம் முதல் முறையாக தனது காதலை அஜித் வெளிப்படுத்தியவிதமே வித்தியாசமாக இருந்தது என கூறியிருக்கிறார் சரண். தனது முன்னிலையில் நடந்த அந்த காதல் புரபோசலை ஊடகங்களிடமும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சென்னையில் சீனிவாச தியேட்டரில் அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததது. ஷாலினி காதலை செல்லும்போது அதனை அஜித்  நிராகரிக்கும் அந்த காட்சிக்கு நேர்மாறாக அஜித்தின் ரியல் லைஃபில் அப்போதை சூழல் இருந்திருக்கிறது. அமர்க்களம் படத்திற்கு முதலில் பிரித்து பிரித்துதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். இந்த காட்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது இடைவேளையில் ஷாலினி அருகில் இருக்கும்போது அவரது காதில்படுமாறு சத்தமாக சரணிடம் ஒன்றை கூறியிருக்கிறார் அஜித். ”இந்த படத்திற்கு தனித் தனியாக கொடுத்த கால்ஷீட்டை இனி மொத்தமாக கொடுத்துவிடுகிறேன். படத்தை சீக்கிரமாக எடுத்து முடித்துவிடுங்கள்” என்று கூற இயக்குநர் சரண் ஏனென்று கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் ” இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் இந்த பெண்ணை (ஷாலினி) நான் காதலித்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது” என்று ஷாலினி காதில் விழும்படி கூறி அவரிடம் தனது காதலை மறைமுகமாக புரபோஸ் செய்திருக்கிறார். பின்னர் இருவருக்குமான காதல் அமர்க்களம் படப்பிடிப்பின்போதே  அமர்க்களமாக மலர்ந்தது.  2000மாவது ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதியாகினர்.காதல் மன்னனால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் அதிலிருந்து மீண்டும் லாபம் அடைய வேண்டும் என்பதற்காக அமர்க்களம் படத்தில் தீவிர  ஆர்வத்துடன் நடித்துக்கொடுத்த அஜித்குமார், படத்தில் நடித்தற்காக சம்பளமே வாங்கவில்லையாம். அட்வான்சிற்காக தயாரிப்பாளர் கொடுத்த காசோலையைக்கூட கடைசிவரை  அஜித்குமார் பயன்படுத்தவே இல்லையாம்.

அஜித்குமார், சரண் கூட்டணியில் உருவான மற்றொரு படம் அசல். சிவாஜி புரடக்ஷன் தயாரித்த  இந்த படம் 2010ம் ஆண்டு பிப்ரவரி 5ந்தேதி வெளியானது.  இந்த படத்தின்போது அஜித்குமார் நடிப்பதோடு நின்றுவிடாமல் ஒரு அஸேசியேட் இயக்குநரைப்போல சரணுக்கு உதவியிருக்கிறார். எனினும் ஒரு கட்டத்தில் படத்தின் வெற்றி குறித்து அஜித்திற்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் டைட்டில் கார்டில் அஸோசியேட் இயக்குநர் என தனது பெயரையும் போடும்படி சரணிடம் கூறினாராம் அஜித். படத்தின் கதாநாயகன் தலையீட்டால்தான் எதிர்பார்த்த அளவு படம் வரவில்லை என்று பழி தன் மீது போகட்டும், இயக்குநர் சரணுக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் இவ்வாறு கூறியிருக்கிறார்.  அஜித்தின் இந்த வியத்தகு பெருந்தன்மையான மனதை சுட்டிக்காட்டி இயக்குநர் சரண் நெகிழ்ந்திருக்கிறார்.

அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்த நிகழ்வும் அசல் படத்தின்போதுதான் நிகழ்ந்தது. ரசிகர் மன்றங்களை கலைக்கும் முடிவை அஜித் அறிக்கையாக வெளியிட்டபோது, அந்த அறிக்கையை அஜித் சொல்ல சொல்ல இயக்குநர் சரண்தான் எழுதியிருக்கிறார். அப்போது ஏன் இந்த முடிவு இதனை மாற்றிக்கொள்ளலாமே என சரண்  கேட்டபோது அதனை ஏற்க மறுத்த அஜித், தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். அதற்கு சில காரணங்களையும் கூறியிருக்கிறார்.

” ரசிகர்களை பொறுத்தவரை எனக்கு எல்லோரும் ஒன்றுதான். எல்லோரையும் சமமாகவே கருதுகிறேன். ஆனால் ஒரு அமைப்பாக இருக்கும்போது தலைவர், பொருளாளர் போன்ற பல்வேறு பதவிகள் அடிப்படையில் முக்கியத்துவங்கள் இருக்கும். அப்போது ஒருவருக்கொருவர் தேவையில்லாமல் சண்டை சச்சரவுகளில் ஈடுபட நேரிடலாம். அப்படியொரு சண்டை சச்சரவு வருவதை நான் விரும்பவில்லை. எனவே ரசிகர் மன்றங்களை கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என இயக்குநர் சரணிடம் விளக்கம் அளித்துள்ளார் அஜித்குமார்.

அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து 13 ஆண்டுகள் ஆகிறது. எனினும் இதனால் அவருக்கு இருந்த செல்வாக்கு எள்ளவும் குறையவில்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. எந்த விழாக்களிலும் முகம் காட்டாமல் இருந்தால்கூட அவர் முகம் திரையில் தோன்றினால் ஆர்ப்பரிப்பு அடங்க நெடுநேரமாகிறது. திரையுலகில் அஜித்குமார் ஒரு ஆச்சர்யம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை”- அரசு பேருந்து நடத்துநர்களுக்கு எச்சரிக்கை

Web Editor

போலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி. நகைக்கடை மீது புகார்

Jeba Arul Robinson

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: விரிவான விசாரணைக்கு குழு – முதலமைச்சர்

Halley Karthik