முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் பாஜக தலைமையை நிரப்பப்போவது யார்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 புதிய அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்று கொண்ட நிலையில், தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி மாற்று கட்சியினரிடையேயும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மீண்டும் வெற்றி பெற்று பதவியேற்று கொண்ட பிறகு, அவ்வப்போது சிலர் ராஜினாமா செய்த நிலையிலும், அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 43 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை அடுத்து கைபற்றப்போவது யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சுழன்றடித்து வருகிறது.

பாஜகவின் முக்கிய கொள்கைகளுள் ஒன்று, ஒருவர் இரண்டு பதவிகளில் அங்கம் வகிக்க கூடாது என்பதுதான். கடந்த காலங்களில் பலர் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, கட்சி பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே. 2019-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும், 2014-ம் ஆண்டு மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும் வரலாறு.

பாஜக முக்கிய பொறுப்புகளுக்கு வருபவர்கள், ஆரம்ப காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணியாற்றி இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது எழுதப்படாத விதியாகவே உள்ளது.

கடந்த காலங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர்களில் தமிழிசை செளந்தரராஜன் தவிர்த்து மற்ற தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.லட்சுமணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எல்.முருகன் உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் வழியில் வந்தவர்களே…

தற்போது புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படலாம் எனப்படுகிறது. ஏனென்றால் கட்சியில் அதிக செல்வாக்கு படைத்தவர்களான வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த காலங்களில் தேசிய கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகள் செய்யாத நிறைய மாற்றங்களை பாஜக செய்து காட்டிள்ளது என்றே கூறலாம். டாக்டர் கிருபாநிதிக்கு பிறகு 2-வது முறையாக பட்டியலினத்தவரான எல்.முருகனை தலைவராக்கியது, பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தமிழிசை செளந்தரராஜனை மாநில தலைவராக்கியது உள்ளிட்டவை முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அண்ணாமலை நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

எனினும், பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், 2019 செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, 6 மாத காலமாக புதிய தலைவரை நியமிப்பது குறித்து அக்கட்சியில் நீண்ட இழுபறி நடைபெற்றது. அப்போது அடுத்த தலைவர்கள யார் என்ற கேள்வி எழுந்தபோது வானதி சீனிவாசன் , கே.டி.ராகவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பெயர்கள் அடிப்பட்டது என்றாலும், போட்டியிலேயே இல்லாத ஒரு புதிய தலைவராக எல்.முருகனை தேர்ந்தெடுத்து பலருக்கு ஆச்சரியமளித்தது பாஜக.

நீதிபதி அந்தஸ்தில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகனை, அதிரடியாக அரசியல் களத்தில் இறக்கியது பாஜக. திமுகவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு போன்ற பிரபலங்களை பாஜகவில் இணைத்தது, 4 எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியது, வேல் யாத்திரை என தமிழ்நாடு அரசியலில் ஒரு அதிர்வலையை உருவாக்கினார்.

இந்நிலையில், எல்.முருகனை போன்றே மீண்டும் ஒரு இளம்தலைவரே பாஜக தேர்வாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருப்பதற்கு மொழி மிக முக்கியம். ஏனென்றால் நேரடியாக தேசிய தலைவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இம்முறை கொங்கு அல்லது தென் மாவட்டத்தை சார்ந்தவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது பாஜகவின் தகவல் தொழிட்நுட்ப பிரிவு தலைவராக உள்ள சி.டி.ஆர் நிர்மல்குமார் நியமிக்கப்படலாம் எனவும் பாஜக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

-மா.நிருபன் சக்கரவர்த்தி

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Vandhana

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்

Halley karthi

பிரபல நடிகைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை

Saravana Kumar