பாஜக, திமுக, அதிமுக; யார் இந்த சுனில்?

காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தல்களில் வெற்றியை தேடித் தரும் முக்கிய குழுவில் விளம்பர வெளிச்சத்தை விரும்பாத தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகொளு நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சுனில்? 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…

காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தல்களில் வெற்றியை தேடித் தரும் முக்கிய குழுவில் விளம்பர வெளிச்சத்தை விரும்பாத தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகொளு நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சுனில்?

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வென்று மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது காங்கிரஸ். சென்ற வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடத்தப்பட்ட காங்கிரசின் சிந்தனை அமர்வில் பல உத்திகள் வகுக்கப்பட்டன. 2024 மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட டாஸ்க் போர்ஸ் குழுவில், தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் கனுகொலுவும் இடம் பெற்றிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபலமான தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிசோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. ஆனால் அவருக்கு போட்டியாளராக பார்க்கப்படும் சுனில் கனுகொலுவை, அதிரடியாக காங்கிரசில் இணைத்து அக்கட்சியின் சிறப்பு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சுனில் கனுகொலு பற்றியும் அவரின் பணிகள் பற்றியும் பார்க்கலாம்.

பிரசாந்த கிஷோரின் நிறுவனம் ஐபேக் என்றால், சுனிலின் நிறுவனத்தின் பெயர் மைண்ட்ட்ஷேர் அனல்டிக்ஸ் கம்பெனி. பிரசாந்த் கிஷோரும், சுனிலும் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பணி செய்தவர்கள்தான். 2011ல் குஜராத்துக்கு வந்தார் பிரசாந்த் கிஷோர். அதற்கு முன்பே நரேந்திர மோடியின் ஆலோசகராக செயல்பட்டவர் சுனில். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்காக பிரசாந்த்தும், சுனிலும் இரட்டைக் குதிரைகளாக செயல்பட்டு இலக்கை எட்டினர்.

இதற்கிடையே 2015-ல் பிரசார்ந்த கிஷோருடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக ‘ஐ–பேக்’நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் சுனில். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்காக , விடியட்டும்.. முடியட்டும்’ உள்ளிட்ட மக்களை ஈர்க்கும் தேர்தல் செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அந்த வியூகங்கள், ஜெயலலிதாவையே உற்றுநோக்க வைத்ததாகச் சொல்வார்கள். அத்தேர்தலில் திமுக ஆட்சியமைக்காவிட்டாலும், 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பலமான எதிர்க்கட்சி என்ற பெயரை பெற்றது. 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்காக பணியாற்றினார்.

2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 க்கு 39 இடங்களில் வெற்றி பெற சுனிலின் தேர்தல் வியூகமும் காரணம் என கூறப்பட்டது. அந்த தேர்தல் வெற்றிக்கு பின்னர், சுனிலுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படடதால் , திமுகவை விட்டு வெளியேறியது சுனிலின் நிறுவனம். 2020 ஆம் ஆண்டு முதல் அதிமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார். 2021 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க ஒப்பந்தம் போட்டார். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்காவிட்டாலும் 66 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கு முன்னேற சுனிலும் முக்கிய காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கூறினர். பாஜக, திமுக, அகாலிதளம், அதிமுக இப்போது காங்கிரஸ் என பல கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துள்ளார் சுனில்.

எந்த கட்சிக்கு பணியாற்றினாலும் உண்மையாக செயல்படுவேன். எங்கள் வியூக பணியை சந்தேகிக்க வேண்டாம் என ஆணித்தரமாக சொல்லி வருபவர் சுனில் கனுகொலு. பல்வேறு கட்சிகளுக்கு இவர் வகுத்துக் கொடுத்த வியூக அனுபவம், அந்த கட்சிகளின் பலம் பலவீனங்களை அறிந்திருந்தல் போன்றவை காங்கிரசுக்கு வியூகம் வகுக்கும் போது பலனளிக்கும் என நம்புகிறது காங்கிரஸ்…. இந்த நம்பிக்கையும், அவரது வியூகமும், கை சின்னத்தை மத்தியில் ஆட்சி பீடத்தில் அமர வைக்குமா? மீண்டும் காங்கிரசை அரியணை ஏற்றுமா?…. பொறுத்திருந்து பார்க்கலாம்..

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.